உலகெங்கிலும் தற்போது தொழில்நுட்பத்தின் வளர்ச்சி அதிகரித்துள்ளது. எந்த அளவிற்குத் தொழில் நுட்பத்தின் வளர்ச்சி அதிகரித்துள்ளதோ அந்த அளவிற்கு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மோசடிகளும் நடந்துவருகிறது.
ஓடிபி மோசடி, போலி எஸ்.எம்.எஸ் மோசடி, QR குறியீடு மோசடி எனப் பல மோசடிகள் அரங்கேறி வருகின்றன. அந்த வகையில் தற்போது குரல் மாற்றி பேசி பணத்தை பிடுங்கும் மோசடி நடைபெற்று வருகிறது.
அதாவது AI வாய்ஸ் குளோனிங் தொழில்நுட்பத்தை (AI voice cloning technology) பயன்படுத்தி மோசடிக்காரர்கள் டார்கெட் செய்யப்பட்ட நபர்களின் நம்பிக்கைக்குறிய நபர்களைப் போல நடித்து அவர்களின் பணம் அல்லது தனிநபர் விவரங்களை திருடி வருவது தொடர்ந்து அதிகரித்து காணப்படுகிறது.
எனினும் இது போன்ற மோசடிகளில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்வதற்கு பல்வேறு வழிகள் உள்ளன. உங்களது உடன் பணிபுரிபவர்கள் அல்லது அன்புக்குரியவர்களிடமிருந்து வழக்கத்திற்கு மாறான நேரங்களில் இருந்து போன் கால்கள் வரும்பொழுது எச்சரிக்கையாக இருங்கள்.
பெரும்பாலான நேரங்களில் மோசடிக்காரர்கள் உங்களை விரைவான முடிவுகள் எடுப்பதற்கு அழுத்தம் கொடுப்பார்கள். உங்களுடைய அன்புக்குரியவர்கள் பிரச்சனையில் இருப்பதாகவும், அவர்களுக்கு உடனடியாக பணம் தேவை என்பது போன்ற பொய்யையும் சொல்வார்கள்.
AI வாய்ஸ் குளோனிங் தொழில்நுட்பம் நல்ல முன்னேற்றம் அடைந்து இருந்தாலும், அது இன்னும் மனிதனைப் போல அச்சு அசலாக மாறவில்லை. எனவே ரோபோடிக் போன்ற பேச்சு அல்லது விசித்திரமான உச்சரிப்பு போன்றவை ஏதேனும் இருந்தால் எச்சரிக்கையாக இருங்கள். இதன் மூலமாக நீங்கள் ஒரு உண்மையான நபரிடம் பேசவில்லை என்பதை நீங்கள் புரிந்து கொள்ளலாம்.
உங்களுக்கு தெரியாத மற்றும் நீங்கள் நம்பாத ஒரு நபரிடம் ஒருபோதும் பணமோ அல்லது சோஷியல் செக்யூரிட்டி நம்பர், பேங்க் அக்கவுண்ட் நம்பர் போன்றவற்றை போன் மூலமாக தர வேண்டாம். எந்த ஒரு நியாயமான நிறுவனமும் இது போன்ற தகவல்களை போனில் கேட்காது.
உங்களுக்கு நன்றாக தெரிந்த ஒரு நபரிடம் இருந்து வரக்கூடிய ஒரு போன் காலுக்கு நீங்கள் பதில் அளித்தால், கட்டாயமாக அது அவர்கள் தான் என்று ஊகிக்க வேண்டாம். உண்மையாகவே அது அவர்கள் தானா என்பதை தெரிந்து கொள்வதற்கு ஒரு சில கேள்விகளை அவர்களிடம் நீங்கள் கேட்கலாம்.
உடனடியாக ஒரு முடிவு எடுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் அதிலிருந்து பின் வாங்கி சற்று பொறுமையாக யோசித்துப் பாருங்கள். இந்த விஷயம் குறித்து நீங்கள் யோசிக்க வேண்டும் என்று காலரிடம் சொல்லிவிட்டு சிறிது நேரம் எடுத்துக்கொண்டு நன்றாக யோசிக்கவும்.