பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, 2 நாள் பயணமாக ஜனவரி 16-ம் தேதி கேரளாவுக்குச் செல்கிறார். தொடர்ந்து, அன்றையதினம் மாலை கொச்சியில் பிரம்மாண்ட ரோடு ஷோவை நடத்தும் பிரதமர், மறுநாள் குருவாயூரில் நடைபெறும் நடிகர் சுரேஷ் கோபியின் மகள் திருமணத்தில் கலந்துகொள்கிறார்.
பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, கடந்த ஜனவரி 2 மற்றும் 3-ம் தேதிகளில் 2 நாள் பயணமாக தமிழகம், கேரளா மற்றும் லட்சத்தீவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டார். 2-ம் தேதி திருச்சியில் விமான நிலைய முனையக் கட்டடத்தை திறந்து வைத்த பிரதமர், மாலை லட்சத்தீவுக்கு புறப்பட்டுச் சென்றார்.
பின்னர், அன்றையதினம் இரவை லட்சத்தீவிலேயே கழித்த பிரதமர் மோடி, மறுநாளான ஜனவரி 3-ம் தேதி காலையில் கடற்கரையில் வாக்கிங் மற்றும் ஸ்நோர்கெலிங் செய்து மகிழ்ந்தார். தொடர்ந்து, மாலையில் கேரள மாநிலம் திருச்சூரில் நடைபெற்ற பா.ஜ.க. மகளிர் மாநாட்டில் கலந்துகொண்டார்.
இந்த நிலையில், மீண்டும் 2 நாள் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி, ஜனவரி 16-ம் தேதி கேரளாவுக்குச் செல்கிறார். விமானம் மூலம் மாலை 5 மணிக்கு கொச்சி கடற்படை விமான நிலையத்தைச் சென்றடையும் பிரதமர், மாலை 6 மணிக்கு மகாராஜாஸ் கல்லூரி மைதானத்தில் இருந்து 1 கிலோ மீட்டர் நீள ரோடு ஷோவை நடத்துகிறார்.
இந்த ரோடு ஷோ, மருத்துவமனை சாலை, பார்க் அவென்யூ வழியாக எர்ணாகுளம் விருந்தினர் மாளிகையை சென்றடையும். இதற்காக திறந்த வாகனம் பயன்படுத்தப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், இந்நிகழ்வுக்காக சுமார் 50,000 கட்சித் தொண்டர்களை திரட்டி பிரதமருக்கு உற்சாக வரவேற்பு அளிக்க பா.ஜ.க. திட்டமிட்டிருக்கிறது.
அன்றையதினம் இரவு கொச்சியில் தங்கும் பிரதமர் மோடி, ஜனவரி 17-ம் தேதி நடைபெறும் சுரேஷ் கோபியின் மகள் திருமண விழாவில் கலந்துகொள்ள ஹெலிகாப்டரில் குருவாயூர் செல்கிறார். திருமண விழாவுக்கு முன்னதாக, காலை 8 மணியளவில் குருவாயூர் கோவிலில் பிரதமர் மோடி வழிபாடு நடத்துவார்.
பிரதமர் மோடியின் வருகையை முன்னிட்டு, பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன. இந்த திருமண விழாவில் பிரதமர் மோடியுடன், உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் கலந்து கொள்வார் என்று கூறப்படுகிறது.
திருமண விழா முடிந்ததும், கொச்சி திரும்பும் பிரதமர் மோடி, வில்லிங்டன் தீவில் உள்ள கொச்சி கப்பல் கட்டும் தளத்தின் சர்வதேச கப்பல் பழுதுபார்க்கும் வசதி மற்றும் உலர் கப்பல்துறையை காலை 10 மணிக்கு திறந்து வைக்கிறார். காலை 11 மணிக்கு மரைன் டிரைவில் உள்ள 7,000 சக்தி கேந்திரா பொறுப்பாளர்களை சந்திக்கிறார். பினனர், பிரதமர் மோடி விமானம் மூலம் டெல்லி திரும்புகிறார்.