கேரள முதல்வர் பினராயி விஜயனின் மகள் வீணா விஜயன் நிறுவனத்துக்கு, சி.எம்.ஆர்.எல். நிறுவனத்திலிருந்து 1.72 கோடி ரூபாய் பணப் பரிவர்த்தனை தொடர்பாக விசாரிக்க, மத்திய அரசு 3 பேர் கொண்ட குழுவை அமைத்திருக்கிறது.
கேரள முதல்வர் பினராயி விஜயனின் மகள் வீணா விஜயன். இவர், கடந்த பல ஆண்டுகளாக கேரளாவில் எக்ஸாலாஜிக் சொல்யூஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் (Exalogic) என்கிற பெயரில் தனியார் ஐ.டி. நிறுவனத்தை நடத்தி வருகிறார்.
இந்த ஐ.டி. நிறுவனமானது, தகவல் தொழில்நுட்பம், மார்க்கெட்டிங் மற்றும் மென்பொருள் சேவைகள் குறித்தும், பல முன்னணி நிறுவனங்களுக்கு ஆலோசனை வழங்கும் நிறுவனமாகவும் செயல்பட்டு வருகிறது.
இந்த நிறுவனம், கொச்சியில் செயல்பட்டு வரும் கொச்சி மினரல்ஸ் அண்ட் ரூட்டில் லிமிடெட் (சி.எம்.ஆர்.எல்.) என்ற நிறுவனத்துடன் இணைந்து செயல்பட ஒப்பந்தம் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால், வீணாவின் ஐ.டி. நிறுவனம் எந்த சேவையும் வழங்கவில்லை.
இந்த சூழலில், கடந்த 3 ஆண்டு காலமாக சி.எம்.ஆர்.எல். நிறுவனத்தில் இருந்து வீணாவின் நிறுவனத்திற்கு 3 லட்சம் ரூபாய் மற்றும் வீணாவின் சொந்தக் கணக்கிற்கு சுமார் 5 லட்சம் ரூபாய் என தொடர்ந்து பணப் பரிவர்த்தனை நடந்து வந்தது.
அந்த வகையில், கடந்த 3 ஆண்டுகளில் சி.எம்.ஆர்.எல். நிறுவனத்தில் இருந்து வீணா விஜயனுக்கு சுமார் 1.72 கோடி ரூபாய் பணப் பரிவர்த்தனை நடந்திருக்கிறது. எனவே, சேவைகள் வழங்கப்படாமலேயே இவ்வளவு பணம் அனுப்பப்பட காரணம் என்ன என்பது குறித்து வருமான வரித்துறை விசாரணை நடத்தி வருகிறது.
இது தொடர்பாக, சி.எம்.ஆர்.எல். நிறுவனத்தின் முதன்மை நிர்வாக அதிகாரி சுரேஷ் குமார் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது, அரசியல்வாதிகள், கோவில்கள், அரசு ஊழியர்கள் மற்றும் ஊடக நிறுவனங்களுக்கு பணம் செலுத்திய விவரங்கள் அடங்கிய ஆவணங்களை அவர்கள் கைப்பற்றினர்.
அந்த ஆவணங்களில், பணம் பெற்றவர்களின் பெயர்கள் “பி.வி.”, “கே.கே.”, “ஐ.கே.” மற்றும் “ஆர்.சி.” போன்ற சுருக்கமான முறையில் குறிப்பிடப்பட்டிருந்தது. அவை, பினராயி விஜயன், ஐ.யு.எம்.எல். தலைவர் குன்ஹாலி குட்டி, காங்கிரஸ் தலைவர் ரமேஷ் சென்னிதலா ஆகியோரின் சுருக்கங்களாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில்தான், கேரள முதல்வர் பினராயி விஜயன் மகள் வீணா விஜயன் நிறுவனம், சி.எம்.ஆர்.எல். நிறுவனத்திடம் இருந்து பணம் பெற்றது தொடர்பாக விசாரணை நடத்துவதற்கு, 3 பேர் கொண்ட குழுவை மத்திய கார்ப்பரேட் விவகார அமைச்சகம் (எம்.சி.ஏ.) அமைத்திருக்கிறது.
இக்குழுவில், பெங்களூரு நிறுவனங்களின் துணைப் பதிவாளர் பி.எஸ்.வருண், சென்னை மண்டல இயக்குநர் அலுவலகத்தில் துணை இயக்குநராகப் பணிபுரியும் கே.எம்.சங்கர் நாராயண் மற்றும் புதுச்சேரி ஆர்.ஓ.சி. ஏ.கோகுல்நாத் ஆகியோர் இடம் பெற்றிருக்கிறார்கள்.