மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை தமிழக எம்பிக்கள் இன்று சந்தித்தனர்.
குமரிக் கடலில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கடந்த டிசம்பர் 17 மற்றும் 18ஆம் தேதிகளில், நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, குமரி மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கியது. இதில் தூத்துக்குடி மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டது.
இந்நிலையில், தூத்துக்குடி வெள்ள சேதங்களை தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையக் குழு ஆலோசகர் கே.பி.சிங் தலைமையிலான மத்திய குழுவினர் டிசம்பர் 21ஆம் தேதி ஆய்வு செய்தனர்.
இதனிடையே கே.பி.சிங் தலைமையிலான 7 பேர் கொண்ட மத்திய குழுவினர் நேற்று மீண்டும் தூத்துக்குடியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்தனர்.
இந்நிலையில், மத்திய உள்துறை அமித் ஷாவை தமிழக எம்பிக்கள் டெல்லியில் இன்று சந்தித்து பேசினர். அப்போது மிக்ஜாம் புயல் பாதிப்பு மற்றும் தூத்துக்குடி, நெல்லை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளுக்கு நிவாரண நிதியை வழங்குமாறு கோரிக்கை விடுத்ததாக தெரிகிறது.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திமுக எம்பி டி.ஆர். பாலு, மத்திய குழுவின் அறிக்கை கிடைத்தவுடன் பேரிடர் பாதிப்புக்கு ஏற்ப சம்பந்தப்பட்ட துறைகளுடன் ஆலோசித்து, வரும் 27-ம் தேதிக்குள் நிவாரணம் வழங்கப்படும் என அமைச்சர் அமித் ஷா தெரிவித்ததாக கூறினார்.