தமிழர் திருநாளை முன்னிட்டு வீடுகளில் வெண்கலம் மற்றும் மண் பானைகளில் பொங்கலிடுவது வழக்கம். இந்தாண்டு பொங்கல் பண்டிகைக்கு இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில், தமிழகத்தின் தலைநகர் சென்னையில் பொங்கல் பண்டிகை தற்போதே களை கட்டி வருகிறது.
கிராமங்களில்தான் மண் பானைகளில் பொங்கல் வைத்து கொண்டாடும் வழக்கம் இருந்து வந்தது. அதேபோலவே தற்போது, நகர்ப்புறங்களிலும் பெரும்பாலான வீடுகளில் மண் பானைகளில் மட்டுமே பொங்கல் வைத்து கொண்டாடும் வழக்கம் பெருகி வருகிறது.
அந்த வகையில், சென்னையில், மயிலாப்பூர், நங்கநல்லூர், திருவல்லிக்கேணி, தி.நகர், மாம்பலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஏராளமான மண் பானைகள் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளது.
திருநெல்வேலி, செங்கோட்டை, காருகுறிச்சி உள்ளிட்ட தென்மாவட்டங்களில் இருந்து மண் பானைகளை வாங்கி வந்து விற்பனை செய்யப்படுகிறது. இந்தாண்டு, நெல்லை. தூத்துக்குடி உள்ளிட்ட பகுதிகளில் கன மழை வெள்ளம் காரணமாக திருநெல்வேலி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து மண் பானை வரத்து இல்லை. இதனால், மானாமதுரையில் இருந்து மண் பானைகளை வாங்கி வந்து வியாபாரிகள் விற்பனை செய்து வருகின்றனர்.
கரும்பு, மஞ்சள் குலை போன்றவை விற்பனை செய்யும் பகுதிகளின் அருகிலேயே மண் பானைகளும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் பள்ளி, கல்லூரி மற்றும் தனியார் நிறுவனங்களிலும் மண் பானையில் பொங்கல் வைத்து கொண்டாடுவது வழக்கம். வர்ணம் பூசாத பானைகள், வர்ணம் பூசப்பட்ட பானைகள் என்று சிறியது முதல் பெரியது வரை பானைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.
இதில், ஒரு கிலோ முதல் 5 கிலோ வரை பொங்கல் வைக்கும் அளவிற்கு பானைகள் விற்பனை செய்யப்படுகிறது. வர்ணம் பூசப்படாத மண் பானைகள் ரூ.30 முதல் ரூ.200 வரை விற்பனை செய்யப்படுகிறது. அதேவேளையில் வர்ணம் பூசப்பட்ட பெரிய பானையின் விலை ரூ.500 க்கு விற்பனை செய்யப்படுகிறது.