அயோத்தியில் ராமர் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு அயோத்திக்கு 5 லட்சம் லட்டுக்கள் அனுப்ப உள்ளதாக மத்தியப் பிரதேச முதலமைச்சர் மோகன் யாதவ் தெரிவித்துள்ளார்.
ராமர் கோவில் கும்பாபிஷேக விழா தொடர்பாக மத்திய பிரதேச முதலமைச்சர் மோகன் யாதவ் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, கும்பாபிஷேகம் நடைபெறும் ஜனவரி 22ஆம் தேதிக்கு பிறகு அயோத்திக்குச் செல்ல ஒவ்வொரு மாநிலங்களுக்கும் தேதி வழங்கப்படும் என்றும், நாங்கள் அதைப் பின்பற்றி மக்களை தரிசனத்திற்கு அனுப்புவோம் என்றும் இது தொடர்பாக பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளதாகவும் தெரிவித்தார்.
நாடு முழுவதிலும் உள்ள ராமர் பக்தர்கள் அரசர் திரும்பி வருவதை கொண்டாடும் நாளை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன்பு, மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த மகாராஜ் விக்ரமாதித்யா அயோத்தியில் ராமர் கோயிலைக் கட்டினார். சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்பு அந்த கோயில் பாபரால் இடிக்கப்பட்டது. தற்போது மீண்டும் கோவில் கட்டப்படுகிறது. மத்திய பிரதேச மாநிலத்தில் இருந்து அயோத்திக்கு 5 லட்சம் லட்டுகளை பிரசாதமாக அனுப்ப உள்ளோம் என தெரிவித்தார்.
இந்த லட்டுகளை தயாரிக்க சுமார் ஐந்து நாட்கள் ஆகும்.இதனை அயோத்தி கொணடு செல்ல மூன்று முதல் ஐந்து டிரக்குகள் ஏற்பாடு செய்யப்படவுள்ளதாக அதிகாரிகள் கூறினர்.
இதனிடையே ஜனவரி 16 முதல் 22, 2024 வரை மாநிலம் முழுவதும் உள்ள கோயில்களில் ராமர் கீர்த்தனைகள் மற்றும் பிற மத நிகழ்வுகளை ஏற்பாடு செய்யுமாறு மத்திய பிரதேச கூடுதல் தலைமைச் செயலர் (மத அறக்கட்டளை மற்றும் அறநிலையத்துறை அமைச்சகம்) உத்தரவிட்டுள்ளார்.