1990-களில் இராமர் கோவில் கரசேவையின் போது, உயிரிழந்த கரசேவர்களை, ஓவியமாக வரையும் பணி நடந்து வருகிறது. இராமர் கோவிலில் இந்த ஓவியங்களை வைக்க கோவில் அறக்கட்டளை பரிசீலித்து வருவதாக விஷ்வ ஹிந்து பரிஷத் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
உத்தர பிரதேச மாநிலம் அயோத்தி இராமஜென்ம பூமியில், மிக பிரம்மாண்டமாக இராமர் கோவில் கட்டப்பட்டு வருகிறது. இக்கோவில் கும்பாபிஷேகம் வருகிற 22-ஆம் தேதி நடைபெறுகிறது. அன்றைய தினம் இராமரின் குழந்தை சிலை பிரதிஷ்டை செய்யப்படவிருக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீராம ஜென்ம பூமி அறக்கட்டளை செய்து வருகிறது.
இராமர் கோவில் கும்பாபிஷேக விழாவில் பங்கேற்கும் வகையில், நாட்டின் முக்கிய பிரமுகர்கள், அரசியல் தலைவர்கள், ஆன்மீக பெரியவர்கள், திரைத்துறை பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள் உள்ளிட்டோருக்கு ஸ்ரீராம ஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை அழைப்பு விடுத்து வருகிறது.
இந்நிலையில், 1990-களில் இராமர் கோவில் கரசேவையின் போது, உயிரிழந்த கரசேவர்களை, ஓவியமாக வரையும் பணி நடந்து வருகிறது. லக்னோவைச் சேர்ந்த கலைஞர்கள் இப்பணியில் ஈடுபட்டுள்ளனர். ஓவியம் வரைவதற்கு ஆயில் பெயின்ட் பயன்படுத்துகின்றனர். இதற்கான பணிகள் இறுதி கட்டத்தில் உள்ளது.
இராமர் கோவிலில் இந்த ஓவியங்களை வைக்க கோவில் அறக்கட்டளை பரிசீலித்து வருவதாக விஷ்வ ஹிந்து பரிஷத் செய்தித் தொடர்பாளர் ஷரத் சர்மா தெரிவித்துள்ளார். எனினும், இது தொடர்பான இறுதி முடிவு இன்னும் எடுக்கப்படவில்லை.