கோதுமை, அரிசி, சர்க்கரை மற்றும் வெங்காயம் மீதான ஏற்றுமதித் தடையை நீக்குவதற்கான எந்த திட்டத்தையும் அரசாங்கம் பரிசீலிக்கவில்லை என்று மத்திய வர்த்தகத்துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்திருக்கிறார்.
உள்நாட்டில் அரிசி, கோதுமை, சர்க்கரை, வெங்காயம் போன்ற அத்தியாவசிப் பொருட்களின் விலை உயர்வைக் கட்டுப்படுத்தும் வகையில், மேற்கண்ட பொருட்களின் ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை விதித்தது.
அந்த வகையில், 2022 மே மாதம் கோதுமை ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்பட்டது. 2023 ஜூலை மாதம் முதல் பாஸ்மதி அல்லாத அரிசி ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்பட்டது. 2023 அக்டோபர் மாதம் முதல் சர்க்கரை ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்பட்டது.
எனினும், நட்பு நாடுகளின் உணவுத் தேவையை பூர்த்தி செய்யும் வகையில், குறிப்பிட்ட சில நாடுகளுக்கு மேற்கண்ட பொருட்களை ஏற்றுமதி செய்ய அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. இந்த சூழலில்தான், ஏற்றுமதிக்கான தடையை நீக்குவது தொடர்பாக எந்தத் திட்டத்தையும் அரசு பரிசீலிக்கவில்லை என்று மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் கூறியிருக்கிறார்.
இதுகுறித்து புதுடெல்லியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மத்திய வர்த்தகத்துறை அமைச்சர் பியூஷ் கோயல், “கோதுமை, அரிசி, சர்க்கரை மற்றும் வெங்காயம் மீதான ஏற்றுமதித் தடையை நீக்குவதற்கான எந்த திட்டத்தையும் அரசாங்கம் பரிசீலிக்கவில்லை.
அதேபோல, கோதுமை மற்றும் சர்க்கரையை இறக்குமதி செய்யவும் எந்தத் திட்டமும் தேவையும் இல்லை. உள்நாட்டுச் சந்தையில் அத்தியாவசியப் பொருட்களின் விலையைக் கட்டுப்படுத்த அரசாங்கம் தடை விதித்திருக்கிறது.
அதேசமயம், இந்தோனேசியா, செனகல் மற்றும் காம்பியா போன்ற நாடுகளுக்கு அரிசியை ஏற்றுமதி செய்வதற்கும், உணவுப் பாதுகாப்புத் தேவைகளுக்கும் நட்பு நாடுகளுக்கு அரசாங்கம் உதவுகிறது” என்று கூறியிருக்கிறார்.