பி.எம்.ஜன்மேன் திட்டத்தின் கீழ் பி.எம். ஆவாஸ் யோஜனா கிராமின் முதல் தவணையை பாரதப் பிரதமர் நரேந்திர மோடி காணொளிக் காட்சி மூலம் நாளை வழங்குகிறார்.
கடைக்கோடியில் இருக்கும் கடைசி பயனாளிக்கும் மத்திய அரசின் திட்டங்கள் சென்றடைய வேண்டும் என்கிற பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் முயற்சியைத் தொடர்ந்து, பாதிக்கப்படக்கூடிய பழங்குடியின குழுக்களின் சமூக மற்றும் பொருளாதார நலனுக்காக கடந்த ஆண்டு நவம்பர் மாதம் PM-JANMAN திட்டம் தொடங்கப்பட்டது.
இத்திட்டத்திற்காக சுமார் 24,000 கோடி ரூபாய் பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டு, 9 அமைச்சகங்கள் மூலம் 11 முக்கியமான விஷயங்களில் கவனம் செலுத்தப்படுகிறது. அதாவது, பாதுகாப்பான வீடுகள், சுத்தமான குடிநீர், கல்வி, சுகாதாரம் மற்றும் ஊட்டச்சத்துக்கான மேம்பட்ட அணுகல்.
மின்சாரம், சாலை மற்றும் தொலைத்தொடர்பு இணைப்பு மற்றும் நிலையான வாழ்வாதார வாய்ப்புகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை பாதிக்கப்பட்ட பழங்குடியின குடியிருப்புகளுக்கு வழங்க வேண்டும்.
மேலும், பழங்குடியின குடும்பங்களின் சமூக மற்றும் பொருளாதார நிலைமைகளை மேம்படுத்துவதே இத்திட்டத்தின் நோக்கமாகும். அந்த வகையில், பி.எம். ஜன்மேன் பயனாளிகள் 1 லட்சம் பேருக்கு நாளை முதல் தவணை வழங்கப்படுகிறது.
இதுகுறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்டிருக்கும் செய்திக்குறிப்பில், “பிரதான் மந்திரி ஜன்ஜாதி ஆதிவாசி நியாய மகா அபியான் (PM-JANMAN) திட்டத்தின் கீழ், பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா கிராமின் முதல் தவணையை 1 லட்சம் பயனாளிகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி நாளை காணொலிக் காட்சி மூலம் வழங்குகிறார்.
தொடர்ந்து நிகழ்வில் பங்கேற்ற PM-JANMAN பயனாளிகளுடன் பிரதமர் மோடி உரையாடுகிறார்” என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.