கேரள மாநிலம் கொச்சியில் லிவிங்ட்டன்னில், சுமார் 4000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய கொச்சின் ஷிப்யார்ட் லிமிடெட் சர்வதேச கப்பல் பழுது பார்க்கும் மையத்தைப் பாரத பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்து நாட்டிற்கு அர்ப்பணித்துள்ளார்.
கேரளா மாநிலத்திற்கு இரண்டு நாள் பயணமாகப் பாரத பிரதமர் மோடி சென்றுள்ளார். அங்கு குருவாயூரில் உள்ள கிருஷ்ணர் கோவிலில் பிரதமர் மோடி சாமி தரிசனம் செய்தார்.
அதன் பின்னர், குருவாயூர் கோவிலில் நடந்த முன்னாள் பாஜக நாடாளுமன்ற உறுப்பினரான நடிகர் சுரேஷ் கோபியின் மகள் திருமணத்தில் பிரதமர் மோடி கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்.
இதனைத் தொடர்ந்து கொச்சியின் வில்லிங்டன் தீவில் ரூ.4,000 கோடி மதிப்பிலான கொச்சி ஷிப்யார்ட் லிமிடெட் சர்வதேச கப்பல் பழுதுபார்க்கும் மையம் மற்றும் புதிய கப்பல்துறையைப் பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
இந்த திட்டத்தால், அடுத்த நான்கு ஆண்டுகளில் கொச்சி ஷிப்யார்ட் லிமிடெட் அதன் விற்பனையை இரட்டிப்பாக்கி, அதன் மூலம் வருவாய் ரூ.7,000 கோடி வரை இருக்கும் என்று அம்மாநில அரசாங்கம் எதிர்பார்க்கிறது.
இந்த திறப்பு விழாவில் பேசிய பாரத பிரதமர் மோடி, “இன்று இந்தியா உலக வர்த்தகத்தின் மையமாக மாறும்போது, நாம் நமது கடல் சக்தியை அதிகரிக்கிறோம். இன்று நாட்டில் மிகப்பெரிய உலர் கப்பல்துறை இங்கு உள்ளது. இது தவிர, கப்பல் கட்டுதல், கப்பல் பழுதுபார்ப்பு, எல்பிஜி உள்கட்டமைப்புகள் மற்றும் இறக்குமதி முனையமும் திறந்து வைக்கப்பட்டுள்ளன. இந்த புதிய அம்சங்களால், கப்பல் கட்டும் தளத்தின் திறன் பன்மடங்கு உயரும். இந்த வசதிகளுக்காகக் கேரள மக்களை வாழ்த்துகிறேன்” என்றார்