அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு அயோத்தியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட தொழில்நுட்பங்கள் பொருத்தப்பட்டுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழா ஜனவரி 22 ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீராம் ஜென்மபூமி அறக்கட்டளை செய்து வருகிறது.
அன்றைய தினம் நண்பகல் 12.45 மணியளவில் கர்ப்ப கிரகத்தில் மூலவரான குழந்தை ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்படுகிறது.
இராமர் கோவில் கும்பாபிஷேக விழாவில் பங்கேற்கும் வகையில் நாட்டின் முக்கிய பிரமுகர்களுக்கும் அரசியல் தலைவர்களுக்கும் ஸ்ரீ ராம ஜென்மபூமி தீர்த்த ஷேத்ர அறக்கட்டளை அழைப்பு விடுத்து வருகிறது.
இதையடுத்து தற்போது அயோத்தி நகரம் முழுவதும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. ராமர் கோவில் திறப்பு விழாவிற்கு வருகை தரும் முக்கிய பிரமுகர்களின் பாதுகாப்பிற்காகக் கூடுதல் போலீசார் நியமிக்கப்பட உள்ளனர்.
மேலும் சி.சி.டி.வி. கேமராக்கள், டிரோன்கள், செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட தொழில்நுட்பங்களின் உதவியுடன் அயோத்தி முழுவதும் போலீசார் கண்காணிப்பைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.
அயோத்தி முழுக்க கண்சிமிட்டும் 400 கேமராக்கள், அவற்றை ஒருங்கிணைக்கும் செயற்கை நுண்ணறிவு ஆகியவை பயப்படுத்தப்பட உள்ளது .
4 மெகா பிக்சல் துல்லியம் கொண்ட இந்த கேமராவின் பார்வையில் சந்தேகத்துக்கு இடமான நபர்கள் அல்லது வாகனங்கள் தட்டுப்பட்டால் உடனடியாக அவை கண்காணிப்பு போலீஸாருக்கு சமிக்ஞை அனுப்பும்.
சுமார் 15 அடி தொலைவில் இருந்தாலும் முகங்களை தெளிவாக பதிவு செய்யும் இந்த கேமராக்கள் அனுப்பும் பதிவுகளை ஜார்விஸ் எனப்படும் செயற்கை நுண்ணறிவால் இயக்கப்படும் ஆடியோ-வீடியோ பகுப்பாய்வு மென்பொருள் சில விநாடிகளில் அலசி ஆராய்ந்துவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.