விக்சித் பாரத் சங்கல்ப் யாத்திரைக்கு நாடு முழுவதும் உள்ள மக்களின் அமோக ஆதரவு கிடைத்திருக்கிறது. எனவே, இந்த யாத்திரை பிப்ரவரி மாதம் வரை நீட்டிக்கப்படும் என்று பாரதப் பிரதமர் நரேந்திர மோடி கூறியிருக்கிறார்.
விக்சித் பாரத் சங்கல்ப் யாத்ரா பயனாளிகளுடன் இன்று உரையாடிய பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, “கடந்த 9 ஆண்டுகளாக தாழ்த்தப்பட்டோருக்கு முன்னுரிமை அளிப்பதே எங்கள் முயற்சியாக இருந்தது. அந்த வகையில், கடந்த 9 ஆண்டுகளில் 25 கோடிக்கும் அதிகமான மக்கள் வறுமையில் இருந்து வெளியே வந்துள்ளனர்.
கடந்த 10 ஆண்டுகளில் 4 கோடி பேருக்கு மேல் வீடுகள் வழங்கப்பட்டுள்ளன. வெளிப்படையான மற்றும் திறமையான நிர்வாகத்தை வழங்குவதன் மூலம் வறுமையை தோற்கடிக்க எங்களது அரசாங்கம் உறுதிபூண்டிருக்கிறது.
மேலும், வளர்ச்சியின் நீரோட்டத்தில் இருந்து விலகி இருக்கும் ஒவ்வொரு குடிமகனையும் இணைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அனைவருக்கும் சத்தான உணவு, சுகாதாரம் மற்றும் சிகிச்சை அளிக்கப்பட வேண்டும். ஒவ்வொரு குடும்பத்திற்கும் நிரந்தர வீடு கிடைக்க வேண்டும்.
ஒவ்வொரு வீட்டிற்கும் எரிவாயு இணைப்பு, தண்ணீர், மின்சாரம் மற்றும் கழிப்பறை வசதிகள் இருக்க வேண்டும். அனைவருக்கும் வங்கிக் கணக்கு இருக்க வேண்டும். மேலும், சுயதொழில் தொடர வாய்ப்பளிக்க வேண்டும் என்பதுதான் எங்களது முயற்சி.
இதில், ஒவ்வொரு தெருவும், ஒவ்வொரு வட்டாரமும், ஒவ்வொரு குடும்பமும் சேர்க்கப்பட வேண்டும். இதை உறுதி செய்வதே எங்களின் நோக்கம். இந்த வளர்ச்சியடைந்த இந்தியாவுக்கான சிந்தனையின் விரிவாக்கம்தான் விக்சித் பாரத் சங்கல்ப் யாத்ரா.
இதன் மூலம், மக்கள் எவ்வித சிரமமும் இல்லாமல் மத்திய அரசின் திட்டங்களின் பலன்களை தங்கள் வீட்டு வாசலில் பெறுகிறார்கள். மேலும், விக்சித் பாரத் சங்கல்ப் யாத்ராவில் ஓடும் வளர்ச்சி ரதம், நம்பிக்கையின் ரதமாக மாறிவிட்டது. அதை தற்போது உத்திரவாதத்தின் ரதம் என்றும் மக்கள் அழைக்கின்றனர்.
ஏனெனில், இதன் மூலம் திட்டங்களின் பலன்களிலிருந்து யாரும் இழக்கப்பட மாட்டார்கள். யாரும் விடப்பட மாட்டார்கள் என்று நம்பப்படுகிறது. விக்சித் பாரத் சங்கல்ப் யாத்ரா தொடங்கி 2 மாதங்கள் நிறைவடைந்து விட்டது. ஆகவே, இந்த யாத்திரையை ஜனவரி 26-ம் தேதியோடு முடித்து விடத் திட்டமிட்டிருந்தோம்.
ஆனால், இந்த யாத்திரைக்கு நாடு முழுவதும் உள்ள மக்களின் அமோக ஆதரவு கிடைத்திருக்கிறது. எனவே, இந்த யாத்திரை பிப்ரவரி மாதம் வரை நீட்டிக்கப்படும். இந்த யாத்திரையின் மூலம் அனைத்து திட்டங்களையும் நிறைவு நிலைக்கு கொண்டு செல்வதை அரசாங்கம் நோக்கமாகக் கொண்டிருக்கிறது.
மேலும், விக்சித் பாரத் சங்கல்ப் யாத்ரா ஜன் அந்தோலனாக மாறி இருக்கிறது. இத்திட்டத்தின் மூலம் இதுவரை 15 கோடி பேர் பயன் பெற்றிருக்கிறார்கள். அதோடு, இந்த விக்சித் பாரத் சங்கல்ப் யாத்ரா மூலம் 70 முதல் 80 சதவீத பஞ்சாயத்துகள் முழுமையான நிலையை எட்டி இருக்கின்றன” என்று பிரதமர் மோடி கூறினார்.