நீலகிரி மாவட்டம் உதகையில் கடும் பனிப்பொழிவு நிலவி வருவதால், அப்பகுதி மக்களும், சுற்றுலா பயணிகளும் கடும் சிரமம் அடைந்துள்ளனர்.
நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் நவம்பர் மாதம் தொடங்கி பிப்ரவரி மாதம் வரை பனிப்பொழிவு இருக்கும். டிசம்பர் மாதத்தில் அதிகளவில் பனிப்பொழிவு காணப்படும். ஆனால், காலநிலை மாறுபாடு காரணமாக, இந்த ஆண்டு பனிப்பொழிவு தாமதமாக தொடங்கி உள்ளது.
கடந்த சில நாட்களாக நீலகிரியில் கடும் பனிப்பொழிவு நிலவிவருகிறது. மாவட்டத்தின் பல பகுதிகளிலும் பனிப்பொழிவு கொட்டி வருகிறது.
இரவில் தொடங்கும் கடும் பனிப்பொழிவு, காலை வரை நீடிக்கிறது. இதனால், காலையில் பள்ளிகள் மற்றும் பணிக்கு செல்வோர் கடும் சிரமப்பட்டனர். சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை குளிரின் தாக்கத்தால், நடுங்கி வருகின்றனர்.
அதிகாலை மற்றும் இரவு நேரங்களில் குளிரின் தாக்கம் அதிகமாக உள்ளதால், பொது மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. உடலை வாட்டி வதைக்கும் கடும் குளிரில் இருந்து மக்கள் தங்களைக் காத்துக் கொள்ள சாலையோரங்களில் தீ மூட்டி குளிர் காய்கின்றனர்.
குளிரின் தாக்கம் அதிகமாக உள்ளதால், வாகனங்களை இயக்குவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. மேலும், சாலைகள் முழுவதும் பனிமூட்டம் சூழ்ந்துள்ளதால், வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்துள்ளனர். மேலும், உதகையின் அழகை கண்டு ரசிப்பதற்காக, வந்த சுற்றுலா பயணிகள் விடுதிகளிலேயே முடங்கி உள்ளனர்.