ஏடன் வளைகுடாவில் ஆளில்லா விமானத் தாக்குதலுக்கு உள்ளான மார்ஷல் தீவின் சரக்குக் கப்பலுக்கு, இந்திய கடற்படையின் போர்க்கப்பலான ஐ.என்.எஸ். விசாகப்பட்டினம் உதவி இருக்கிறது.
இதுகுறித்து இந்திய கடற்படை வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “இந்திய போர்க்கப்பலான ஐ.என்.எஸ். விசாகப்பட்டினம், நேற்று கடற்கொள்ளை எதிர்ப்பு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தது. அப்போது, மார்ஷல் தீவு கொடி ஏற்றப்பட்ட எம்.வி.ஜென்கோ பிகார்டி என்கிற சரக்குக் கப்பல் ஏடன் வளைகுடா பகுதியில் வந்து கொண்டிருந்தது.
நள்ளிரவு 11.11 மணியளவில் திடீரென அக்கப்பல் மீது ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டது. இதுகுறித்து இந்திய கடற்படைக்கு தகவல் கிடைக்கவே, உடனடியாக ஐ.என்.எஸ். விசாகப்பட்டினம் போர்க்கப்பல் ஏடன் வளைகுடா பகுதிக்கு அனுப்பப்பட்டது. அக்கப்பல் ட்ரோன் தாக்குதலுக்கு உள்ளான சரக்குக் கப்பலுக்கு உதவி செய்திருக்கிறது” என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இதுகுறித்து இந்திய கடற்படையின் கட்டுப்பாட்டாளர் பணியாளர் மற்றும் சேவைகள் துறையின் இந்திய கடற்படை துணை அட்மிரல் குர்சரண் சிங் கூறுகையில், “பாரசீக வளைகுடா, சோமாலியாவின் கடற்கரை மற்றும் ஏடன் வளைகுடாவில் நிலைநிறுத்தப்பட்டிருக்கும் கடற்படையின் போர்க்கப்பல்கள், கடற்கொள்ளையைத் தடுக்கும் மற்றும் வணிகக் கப்பல்களைப் பாதுகாக்கும்.
இந்தியக் கடற்படையின் முக்கியப் பணிகளில் ஒன்று நமது கடல்சார் நலன்களைப் பாதுகாப்பதாகும். இதில் கடல்கள் வழியாகப் பயணிக்கும் நமது வர்த்தகத்தைப் பாதுகாப்பதும் அடங்கும். அந்த வகையில், இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் நமது ஆர்வத்தின் அடிப்படையில் நமது கப்பல்கள் தற்போது பாதுகாப்புப் பணியை மேற்கொண்டு வருகின்றன.
குறிப்பாக, செங்கடல் பகுதியில், சோமாலியா கடற்கரைக்கு அப்பால், ஏடன் வளைகுடாவில் சமீபத்தில் நடந்த சம்பவங்கள் காரணமாக, கொல்கத்தா கிளாஸ் டிஸ்டிரயர்ஸ், பல போர் கப்பல்கள் மற்றும் பிற கப்பல்களை உள்ளடக்கிய பெரிய அளவிலான போர் வீரர்களை நாங்கள் நிறுத்தி இருக்கிறோம்.
எங்கள் படைகளை அங்கு நிலைநிறுத்தி, எங்கள் கப்பல் பாதுகாப்பை உறுதி செய்வதிலும், கடற்கொள்ளையர் எதிர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதிலும் முதன்மையாக கவனம் செலுத்தும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம்” என்று கூறினார்.
வடக்கு மற்றும் மத்திய அரபிக்கடலில் இருந்து ஏடன் வளைகுடா வரையிலான பகுதியில் கடல் கமாண்டோக்களுடன் கிட்டத்தட்ட 10 போர்க்கப்பல்களை இந்திய கடற்படை நிறுத்தி இருப்பது குறிப்பிடத்தக்கது.