கடந்த 1990-ம் ஆண்டு ஸ்ரீநகருக்கு வெளியே இந்திய விமானப்படை வீரர்கள் 4 பேரை சுட்டுக் கொன்றது காஷ்மீர் பிரிவினைவாதத் தலைவர் யாசின் மாலிக்தான் என்று முன்னாள் இந்திய விமானப் படை ஊழியரும், வழக்கின் முக்கிய நேரடி சாட்சியுமான உமேஷ்வர் அடையாளம் காட்டி இருக்கிறார்.
கடந்த 1990-ம் ஆண்டு ஜனவரி மாதம் 25-ம் தேதி, இந்திய விமானப் படை வீரர்கள் ஸ்ரீநகர் விமான நிலைய பணிக்கு செல்வதற்காக ஜம்மு காஷ்மீரின் ராவல்போரா பகுதியில் காத்திருந்தனர். அப்போது அங்கு வந்த தீவிரவாதிகள், விமானப்படை வீரர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இத்தாக்குதலில் 4 வீரர்கள் உயிரிழந்தனர். 40-க்கும் மேற்பட்ட வீரர்கள் காயமடைந்தனர்.
இச்சம்பவம் நடந்தபோது, யாசின் மாலிக் ஜம்மு காஷ்மீர் பிரிவினைவாத இயக்கத்தின் (ஜே.கே.எல்.எஃப்.) என்ற தீவிரவாதக் குழுவின் தலைவராக இருந்தார். இந்த வழக்கு சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டதைத் தொடர்ந்து, யாசின் மாலிக் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர். பின்னர், யாசின் மாலிக் உட்பட 6 பேர் மீதும் ஜம்மு தடா நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
ஆனாலும், 1994-ம் ஆண்டு யாசின் மாலிக் விடுவிக்கப்பட்டார். தொடர்ந்து, 1995-ம் ஆண்டு யாசின் மாலிக் மீதான விசாரணைக்கு உயர் நீதிமன்றம் தடை விதித்தது. இதன் பிறகு, யாசின் மாலிக் விடுவிக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து, யாசின் மாலிக் ஒரு முக்கிய அரசியல் ஆர்வலராகத் தன்னைக் காட்டிக் கொண்டு, தனது அரசியல் பயணத்தைத் தொடங்கினர்.
எனினும், மீண்டும் யாசின் மாலிக் தீவிரவாதத்திற்கு மாறினார். இந்த சூழலில், கடந்த ஏப்ரல் 2019-ம் ஆண்டு யாசின் மாலிக்கின் இயக்கத்துக்கு மத்திய அரசு தடை விதித்தது. இதன் பிறகு, தீவிரவாத இயக்கத்துக்கு நிதி திரட்டிக் கொடுத்தது தொடர்பான வழக்கில் தேசிய புலனாய்வு அமைப்பால் (என்.ஐ.ஏ.) யாசின் மாலிக் கைது செய்யப்பட்டார்.
இந்த நிலையில், யாசின் மாலிக் மீதான வழக்கு ஜம்மு சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, சம்பவத்தின்போது உடனிருந்த முன்னாள் விமானப் படை வீரர் ராஜ்வர் உமேஷ்வர் சிங் நேரில் ஆஜரானார். அப்போது, புதுடெல்லியில் திஹார் சிறையில் உள்ள முக்கியக் குற்றவாளியான யாசின் மாலிக் வீடியோ வாயிலாக ஆஜர்படுத்தப்பட்டார்.
இதையடுத்து, “சம்பவம் நடந்த தினத்தன்று தான் அணிந்திருந்த அங்கியில் இருந்து துப்பாக்கியை எடுத்து வீரர்களை நோக்கி யாசின் மாலிக் சரமாரியாக சுட்டார்” என்று உமேஷ்வர் அடையாளம் காட்டினார். யாசின் மாலிக் 1989-ம் ஆண்டு அப்போதைய மத்திய உள்துறை அமைச்சர் முப்தி முகமது சயீதின் மகள் ரூபையா சயீத் கடத்தப்பட்ட வழக்கிலும் குற்றம் சாட்டப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.