இந்தியாவில் மின்சார வாகனங்களின் விற்பனை தொடக்கத்தில் இருந்து 300 சதவீதம் அதிகரித்திருப்பதாக மத்திய சாலை, போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்திருக்கிறார்.
இந்தியாவைப் பொறுத்தவரை, நாட்டில் மாசுபாட்டைக் குறைக்க பசுமை ஆற்றல் உற்பத்தி மற்றும் பயன்பாட்டில் தன்னிறைவு அடைவதற்கான முயற்சிகளை மத்திய பா.ஜ.க. அரசு தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, மின்சார வாகன உற்பத்தியில் இந்தியா கவனம் செலுத்தி வருகிறது.
கடந்த மாதம் 24-ம் தேதி நடந்த மின்சார வாகன கண்காட்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய சாலை, போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி, “உலகின் நம்பர் 1 மின்சார வாகன தயாரிப்பாளராக மாறுவதற்கு தேவையான அனைத்து திறன்களையும் இந்தியா கொண்டிருக்கிறது.
இதுவரை 34.54 லட்சம் மின்சார வாகனங்கள் இந்தியாவில் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. வரும் 2030-ம் ஆண்டுக்குள் இந்தியாவில் 1 கோடி மின்சார வாகனங்கள் விற்பனை செய்யப்படும். மேலும், இதன் மூலம் 5 கோடி வேலைவாய்ப்புகளும் உருவாகும்” என்று கூறியிருந்தார்.
இந்த நிலையில், மின்சார வாகன உற்பத்தி தொடர்பாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சாலை, போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி, “பாரீஸ் பருவநிலை ஒப்பந்தத்தின்படி நாட்டில் மாசுபாட்டைக் குறைக்க இந்தியா உறுதி பூண்டிருக்கிறது.
எனவே, நாட்டில் மின்சார வாகன உற்பத்தி அதிகரிக்கப்பட்டு வருகிறது. அதற்கேற்ப, இந்தியாவில் மின்சார வாகனங்களின் விற்பனையும் அதிகரித்து வருகிறது. மின்சார வாகன விற்பனை தொடக்கத்தில் இருந்ததைவிட தற்போது 300 சதவீதம் அதிகரித்திருக்கிறது.
அதேபோல, தற்போது நாளொன்றுக்கு 38 கிலோ மீட்டர் சாலைகள் அமைக்கப்பட்டு வருகிறது. அடுத்த 2024-25 நிதியாண்டில் நாளொன்றுக்கு 60 கி.மீ. சாலைகள் அமைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. 2013-14-ல் 91,000 கி.மீ.யாக இருந்த நாட்டின் மொத்த நெடுஞ்சாலைகளின் நீளம் கடந்த 10 ஆண்டுகளில் 1.45 லட்சம் கி.மீட்டராக உயர்ந்திருக்கிறது” என்றார்.