என்.சி.சி. என்றாலே ஒற்றுமை மற்றும் ஒழுக்கம்தான். நாட்டின் இளைஞர்களை பொறுப்பான மற்றும் தேசபக்தியுள்ள குடிமக்களாக மாற்றும இயக்கம் என்று பாதுகாப்புத்துறை இணை அமைச்சர் அஜய் பட் கூறியிருக்கிறார்.
டெல்லி கான்ட்டில் என்.சி.சி. குடியரசு தின முகாம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பாதுகாப்புத்துறை இணை அமைச்சர் அஜய் பட் கலந்துகொண்டு என்.சி.சி. அமைப்பினர் மத்தியில் உரையாற்றினார். அப்போது அவர், “என்.சி.சி. என்பது ஒரு வெறும் அமைப்பு மட்டுமல்ல. இளைஞர்களை மிகவும் பொறுப்பான மற்றும் தேசபக்தியுள்ள குடிமக்களாக மாற்றும் இயக்கம்.
மேலும், என்.சி.சி. பல்வேறு கலாச்சாரம், மொழி மற்றும் பாரம்பரியத்தின் மூலம், நாட்டின் துடிப்பான பிம்பத்தையும், வேற்றுமையில் ஒற்றுமை என்ற அடையாளத்தையும் பிரதிபலிக்கிறது. ஒற்றுமை மற்றும் ஒழுக்கம் என்கிற பொன்மொழியை மெய்ப்பிக்கும் வகையில், என்.சி.சி. புதிதாக உலகின் மிகப்பெரிய சீருடை அணிந்த இளைஞர் அமைப்பாக வளர்ந்திருக்கிறது.
புனித் சாகர் அபியான், கங்கா உத்சவ் பிரச்சாரம், ஸ்வச் பாரத் அபியான் மற்றும் பிளாஸ்டிக் மாசுபாடு பிரச்சாரம் உள்ளிட்ட சமூக சேவைத் திட்டங்களை நோக்கிய என்.சி.சி.யின் சேவை பாராட்டத்தக்கது. இந்த குடியரசு தினத்தில் அரசியலமைப்பின் இலட்சியங்களுக்கு நம்மை அர்ப்பணித்து, அனைவரையும் உள்ளடக்கிய மற்றும் வலிமையான இந்தியாவை உருவாக்க பாடுபட வேண்டும்” என்றார்.
நிகழ்வின் ஒரு பகுதியாக, என்.சி.சி.யின் ஸ்மார்ட் கேடட்கள் வழங்கிய அணிவகுப்பு மரியாதையை, பாதுகாப்புத்துறை அமைச்சர் அஜய் பட் ஏற்றுக்கொண்டார். தொடர்ந்து, கபுர்தலா சைனிக் பள்ளியின் என்.சி.சி. கேடட்கள் சிறப்பான பேண்ட் இசையை நடத்தினர்.
பின்னர், பல்வேறு சமூக விழிப்புணர்வு கருப்பொருள்கள் மற்றும் கலாச்சார நடவடிக்கைகளை சித்தரிக்கும் கொடி பகுதிக்கு அஜய் பட் விஜயம் செய்தார். அப்போது, மாநில இயக்குனரகங்கள் பற்றி அவருக்கு விளக்கப்பட்டது. பிறகு, தேசிய ஒருங்கிணைப்பு மற்றும் இந்தியாவின் வளமான கலாச்சார பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் கலாச்சார நிகழ்ச்சியையும் பார்வையிட்டார்.