தேசிய புலனாய்வு அமைப்பு (என்.ஐ.ஏ.) வழக்குகளை விசாரிக்கும் பெங்களூரு சிறப்பு நீதிமன்றம், 2012 மற்றும் 2014-க்கு இடையே எக்ஸ் (முன்னர் ட்விட்டர்) பக்கத்தில் ஐ.எஸ்.ஐ.எஸ்.ஸுக்கு ஆதரவாக பதிவுகளை வெளியிட்டு, தீவிரவாத நடவடிக்கைகளை ஆதரித்ததற்காக மெஹ்தி மஸ்ரூர் பிஸ்வாஸ் குற்றவாளி என்று தீர்ப்பளித்திருக்கிறது.
1967 சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம், 13, 18, மற்றும் 39 ஆகிய பிரிவுகளின் கீழ் தீவிரவாத குற்றச்சாட்டுகளில் பிஸ்வாஸ் குற்றவாளி என்று தீர்ப்பளித்தது. இது அதிகபட்சமாக 7 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை கிடைக்கும். இந்திய தண்டனைச் சட்டத்தின் 125-வது பிரிவின் கீழ், “இந்திய அரசாங்கத்துடன் கூட்டணி அல்லது சமாதானத்தில் உள்ள ஆசிய சக்திக்கு எதிராகப் போரை நடத்த முயன்றதற்காக அவர் தண்டிக்கப்பட்டிருக்கிறார்.
மெஹ்தி மஸ்ரூர் பிஸ்வாஸ், 2014-ல் சிரியாவில் ISIS-ன் ஆரம்ப நாட்களில் தீவிரவாத அமைப்புக்கு ஆதரவாக தனது சமூக வலைத்தளங்களை @shamiwitness on X என்ற பயனர் பெயரில் பயன்படுத்தினார். இது இங்கிலாந்து செய்திச் சேனல் ஒன்று வெளிப்படுத்தியது. இதையடுத்து, மெஹ்தி பிஸ்வாஸ் 2014 டிசம்பர் 13-ம் தேதி தனது 24-வது வயதில் பெங்களூருவில் கைது செய்யப்பட்டார்.
முதலில், பிஸ்வாஸ் ஜமாத் நுஸ்ரத் அல்-இஸ்லாம் வால் முஸ்லிமின் அமைப்பை ஆதரித்து வந்தார். “ஐ.எஸ்.ஐ.எஸ். பிரபலமடைந்த பிறகு, பிஸ்வாஸ் அதை ஆதரிக்கத் தொடங்கினார். மேலும், ஜே.என்.ஐ.எம். தலைவர்களை ஐ.எஸ். படைகளில் சேருமாறு வலியுறுத்தினார். தவிர, சிரியா மற்றும் பிற நாடுகளைச் சேர்ந்த தீவிரவாத சந்தேக நபர்களாக அடையாளம் காணப்பட்ட 88 பேருடன் தொடர்பில் இருந்தார்.
ஜூன் 2015-ல், மத்திய குற்றப்பிரிவு போலீஸார் பிஸ்வாஸுக்கு எதிராக 36,986 பக்க குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர். இந்த வழக்கில் தற்போது தீர்ப்பளிக்கப்பட்டிருக்கிறது.