பிரதமர் மோடி சற்று முன்னர், 3 நாள் பயணமாகச் சென்னைக்கு வருகை தந்தார். சென்னைக்கு வருகை தந்த பிரதமர் மோடிக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழக அமைச்சர்கள் மற்றும் அரசியல் கட்சியினர் உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.
கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டி இன்று (ஜன.19ம் தேதி) முதல் ஜனவரி 31 -ம் தேதி வரை சென்னை, கோயம்புத்தூர், மதுரை, திருச்சியில் நடைபெற உள்ளது.
இதில், 36 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் இருந்து சுமார் 5,500 விளையாட்டு வீரர், வீராங்கனைகள், 1,600 பயிற்சியாளர்கள், 1,000 நடுவர்கள் பங்கேற்க உள்ளனர்.
சென்னை நேரு விளையாட்டு அரங்கில் நடைபெறும் ‘கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு’ தொடக்க விழாவில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார்.
இதற்காக, பிரதமர் மோடி, பெங்களூருவில் இருந்து தனி விமானம் மூலம் சென்னைக்கு வருகை தந்தார். இதனைத் தொடர்ந்து, மாலை 6 மணிக்கு கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டியை தொடங்கி வைக்கிறார்.
இந்த நிகழ்ச்சியில், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், தமிழக அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டப் பேரவை உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.
இந்த நிலையில், சென்னை விமான நிலையத்திற்கு வருகை தந்த பிரதமர் மோடிக்கு, தமிழக அரசு சார்பில், அமைச்சர்கள் துரை முருகன், கே.என். நேரு, ஐ.பெரியசாமி, எ.வ.வேலு, சென்னை மேயர் பிரியா உள்ளிட்டோர் வரவேற்பு அளித்தனர்.
இதேபோல, தமிழக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தமாகா தலைவர் ஜி.கே.வாசன், புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி. சண்முகம் உள்ளிடோரும் வரவேற்பு கொடுத்தனர்.
சென்னை விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் அடையாறு ஐ.என்.எஸ். கடற்படை தளத்திற்குச் செல்லும் பிரதமர் மோடி, அங்கு சிறிது நேரம் தங்கிவிட்டு, சென்னை நேரு விளையாட்டு அரங்கில் நடைபெறும் ‘கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு’ தொடக்க விழாவில் பங்கேற்க உள்ளார்.