அயோத்தியில் இராம் லல்லாவின் பிரான் பிரதிஷ்டை விழா வரும் 22-ம் தேதி நடைபெறவிருக்கும் நிலையில், உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத் இரயில் நிலையத்தில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டிருக்கிறது.
உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தி இராம ஜென்ம பூமியில், 1,800 கோடி ரூபாய் செலவில் மிகவும் பிரம்மாண்டமாக இராமர் கோவில் கட்டப்பட்டு வருகிறது. இக்கோவில் கும்பாபிஷேகம் மற்றும் இராம் லல்லா பிரான் பிரதிஷ்டை விழா வரும் 22-ம் தேதி நடைபெறவிருக்கிறது.
இவ்விழாவில் கலந்துகொள்ளுமாறு நாட்டிலுள்ள முக்கியப் பிரமுகர்கள் 10,000 பேருக்கு அழைப்பிதழ் வழங்கப்பட்டிருக்கிறது. ஆகவே, வி.வி.ஐ.பி.க்களின் பாதுகாப்பில் தீவிர கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. மேலும், உ.பி. மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்தும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்து வருகிறார்.
அதோடு, பாதுகாப்பு தொடர்பாக அவ்வப்போது தனது எக்ஸ் பக்கத்தில் வலியுறுத்தியும் வருகிறார். அந்த வகையில், முதல்வர் யோகி வெளியிட்டிருக்கும் எக்ஸ் பதிவில், “மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இராம் லல்லா குழந்தை சிலையின் பிரான் பிரதிஷ்டை நிகழ்ச்சி வரும் 22-ம் தேதி நடைபெறவிருக்கிறது. இவ்விழாவுக்கு இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இருந்து விருந்தினர்கள் வருகிறார்கள்.
மேலும், இந்தியாவின் அனைத்து மாநிலங்களில் இருந்தும் புனிதர்கள், மதத் தலைவர்கள் மற்றும் முக்கியஸ்தர்கள் கலந்துகொள்கிறார்கள். ஆகவே, விரிவான மற்றும் பலமான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும். விழாவில் பங்கேற்க வரும் முக்கியப் பிரமுகர்களின் பாதுகாப்பு மற்றும் மரியாதைக்காக, ஒவ்வொரு வி.வி.ஐ.பி.யுடனும் ஒரு தொடர்பு அதிகாரி நியமிக்கப்பட வேண்டும்.
பிரான் பிரதிஷ்டை நிறைவடைந்த பிறகும் , அதாவது ஜனவரி 22-ம் தேதிக்குப் பிறகும் இந்தியாவின் அனைத்து மாநிலங்களில் இருந்தும் தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் அயோத்திக்கு வருவார்கள். ஆகவே, அடுத்த 6 மாதங்களுக்கு நிலைமையை மதிப்பீடு செய்து, ஒரு விரிவான செயல் திட்டத்தைத் தயாரிக்க வேண்டும்.
அதேபோல, ஜனவரி 22 கொண்டாட்டம் மற்றும் அதற்குப் பிறகு வாகன நிறுத்தம் மற்றும் போக்குவரத்து மேலாண்மைக்கு சிறந்த திட்டத்தை உருவாக்க வேண்டும். வழித்தடத்தை மாற்றுவது பற்றி விரிவான விளம்பரம் செய்யப்பட வேண்டும். பல்வேறு மாவட்டங்களுடன் அயோத்தியை இணைக்கும் முக்கியச் சாலைகளில் போதுமான வாகன நிறுத்துமிடங்கள் இருக்க வேண்டும்.
மேலும், பக்தர்களின் போக்குவரத்துக்கு போதுமான அளவில் மின்சாரப் பேருந்துகள் இருப்பு இருக்க வேண்டும். மேலும், பக்தர்கள் வரும் வாகனங்களை நிறுத்துவதற்கு போதுமான இடங்களை ஏற்பாடு செய்ய வேண்டும்” என்று கூறியிருந்தார். அதோடு, அயோத்தியில் செய்யப்பட்டிருக்கும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும், முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆய்வு செய்தார்.
இந்த நிலையில், அயோத்தி கோவிலில் ஸ்ரீராம் லல்லாவின் ‘பிரான் பிரதிஷ்டை’ விழா மற்றும் குடியரசு தினத்தை முன்னிட்டு, உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத் இரயில் நிலையத்தில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டிருக்கிறது. மாநில போலீஸார் மோப்ப நாய் படையுடன் இரயில் நிலையத்தில் பாதுகாப்பு சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.