அடுத்த 20 ஆண்டுகளில் இந்தியாவில் சுமார் 3 ஆயிரம் விமானங்கள் மற்றும் 41 ஆயிரம் விமானிகள் தேவைப்படுவார்கள் என ஏர்பஸ் இந்தியா மற்றும் தெற்காசியத் தலைவர் ரெமி மைலார்ட் தெரிவித்துள்ளார்.
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் விங்ஸ் இந்தியா 2024 விமான போக்குவரத்து மாநாடு நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்ற ஏர்பஸ் இந்தியா மற்றும் தெற்காசியத் தலைவர் ரெமி மைலார்ட் பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது,இந்தியாவின் விமானப் போக்குவரத்துச் சந்தை உலகளவில் ஒரு உந்து சக்தியாக இருக்கும் என்றும்,புதிய விமான நிலையங்கள் மற்றும் புனரமைப்புகளுக்காக $12 பில்லியன் முதலீடு மதிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
இந்திய விமான சந்தையில் ஏர்பஸ்ஸின் செயல்பாடுகள் முக்கிய பங்கு வகிப்பதாகவும், உலகின் மிக வேகமாக வளரும் விமானச் சந்தையாக இந்தியா உருவாகி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
கடந்த ஆண்டு, ஏர்பஸ் 750 விமானங்களை ஆர்டரை செய்து சாதனை படைத்தது, இண்டிகோ, ஏர் இந்தியா, விஸ்தாரா மற்றும் கோ ஃபர்ஸ்ட் உள்ளிட்ட இந்திய கேரியர்களுக்கு ஏற்கனவே 75 யூனிட்கள் வழங்கப்பட்டன.
இந்தியாவின் விமானப் போக்குவரத்துத் துறையின் வளர்ந்து வரும் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக, ஏர்பஸ் நாட்டில் அதன் உற்பத்தி இருப்பை மேம்படுத்த உறுதி பூண்டுள்ளது. ஏர் இந்தியாவுடன் இணைந்து, குருகிராமில் தனது கூட்டு முயற்சி பயிற்சி மையத்தை விரிவுபடுத்த உள்ளது.
இந்த மையம், அடுத்த பத்தாண்டுகளில் 5,000 விமானிகளுக்கு பயிற்சி அளிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்திய விமானப்படைக்கு C-295 போக்குவரத்து விமானங்களைத் தயாரிப்பதற்காக 2021 இல் டாடா அட்வான்ஸ்டு சிஸ்டம்ஸ் லிமிடெட் (TASL) உடனான ஒப்பந்தம் போன்ற முந்தைய ஒத்துழைப்புகள், இந்தியாவுடனான அதன் உறவுகளை வலுப்படுத்துவதில் ஏர்பஸின் அர்ப்பணிப்பைக் காட்டுவதாக அவர் தெரிவித்தார்.
அடுத்த 20 ஆண்டுகளில் இந்தியாவில் சுமார் 3 ஆயிரம் விமானங்கள் மற்றும் 41 ஆயிரம் விமானிகள், 47,000 தொழில்நுட்ப பணியாளர்கள் தேவைப்படுவார்கள் என்றும் அவர் கூறினார்.