அயோத்தி கோவில் தொடர்பாக காங்கிரஸ் கட்சியினர் விமர்சித்து வரும் நிலையில், இராமரை விமர்சித்து காங்கிரஸ் அரசியல் செய்ய முடியாது என்று விஷ்வ ஹிந்து பரிஷத் இணைப் பொதுச் செயலாளர் சுரேந்திர ஜெயின் கூறியிருக்கிறார்.
உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தி இராம ஜென்ம பூமியில், 1,800 கோடி ரூபாய் செலவில் மிகவும் பிரம்மாண்டமாக ஸ்ரீராமர் கோவில் கட்டப்பட்டு வருகிறது. இக்கோவில் திறப்பு விழா மற்றும் இராம் லல்லா சிலை பிரான் பிரதிஷ்டை விழா ஆகியவை வரும் 22-ம் தேதி நடைபெறுகின்றன.
இதையொட்டி, விழாவில் கலந்துகொள்ளுமாறு நாட்டிலுள்ள முக்கியத் தலைவர்கள் சுமார் 10,000 பேருக்கு அழைப்பிதழ் வழங்கப்பட்டிருக்கிறது. இதில், அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மூத்த தலைவர்கள் சோனியா காந்தி, ஜெய்ராம் ரமேஷ் உள்ளிட்ட பலருக்கும் அடக்கம்.
ஆனால், இவ்விழாவில் கலந்துகொள்ளப் போவதில்லை என்று காங்கிரஸ் கட்சி தரப்பில் அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதோடு, அயோத்தி கோவிலை வைத்து பா.ஜ.க. அரசியல் செய்வதாகவும், அக்கோவில் விழா ஆர்.எஸ்.எஸ். மற்றும் வி.ஹெச்.பி. உள்ளிட்ட இந்து அமைப்புகளால் நடத்தப்படும் விழா என்றும் விமர்சித்து வருகின்றனர்.
மேலும், அயோத்தி கோவில் குறித்தும் சர்ச்சைக்குரிய கருத்துகளைக் கூறி, விமர்சித்து வருகின்றனர். இதற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் காங்கிரஸ் கட்சியினருக்கு கண்டனங்கள் குவிந்து வருகின்றன. அந்த வகையில், தற்போது விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பும் கண்டனம் தெரிவித்திருக்கிறது.
இதுகுறித்து வி.ஹெச்.பி.யின் சர்வதேச இணைப் பொதுச் செயலாளர் சுரேந்திர ஜெயின் செய்தியாளர்களிடம் பேசுகையில், “அயோத்தியில் இராம் லல்லா சிலையின் பிரான் பிரதிஷ்டை விழாவில் பங்கேற்பது தொடர்பாக, காங்கிரஸ் 2 குழுக்களாகப் பிரிந்திருக்கிறது.
இராமரை ஆட்சேபித்து அரசியல் செய்ய முடியாது என்று தெரிந்தவர்கள் ஒரு குழு, சிறுபான்மையினரின் வாக்குகளைக் குறிவைப்பவர்கள் 2-வது குழு. இதில், இராமரை ஆட்சேபித்து அவர்களால் அரசியல் செய்ய முடியாது” என்று கூறியிருக்கிறார்.