அயோத்தி இராமர் கோவில் பிரான் பிரதிஷ்டை விழாவுக்கு, அயோத்தி வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள், வாதாடிய வழக்கறிஞர்கள், குடிமை விருது பெற்றவர்கள், உச்ச நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற தலைமை நீதிபதிகள் மற்றும் ராம் மந்திர் இயக்கத்தின்போது இறந்த கரசேவகர்களின் குடும்பத்தினர் உள்ளிட்டோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது.
உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தி இராம ஜென்ம பூமியில், 1,800 கோடி ரூபாய் செலவில் பிரம்மாண்டமாக இராமர் கோவில் கட்டப்பட்டு வருகிறது. இக்கோவில் கும்பாபிஷேகம் மற்றும் இராம் லல்லா சிலை பிரான் பிரதிஷ்டை விழா வரும் 22-ம் தேதி நடைபெறுகிறது. இவ்விழாவில் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு பிரான் பிரதிஷ்டை செய்கிறார்.
இவ்விழாவில் கலந்துகொள்ளுமாறு நாட்டிலுள்ள சுமார் 10,000 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது. அதன்படி, இந்நிகழ்வில் கலந்து கொள்ளவிருக்கும் விருந்தினர்கள் யார் யார் என்பது குறித்து பார்க்கலாம்…
அழைப்பு விடுக்கப்பட்டிருக்கும் முக்கிய நபர்களில், நாட்டிலுள்ள பிரபல தொழிலதிபர்கள், அரசியல் கட்சிகளின் தலைவர்கள், ஜெயின், பௌத்தம், சீக்கியம் உள்ளிட்ட மதத் தலைவர்கள், ஆதீன கர்த்தர்கள், மடாலய அதிபதிகள், சங்கராச்சாரியார்கள் ஆகியோர் அடக்கம்.
அதேபோல, அயோத்தி இராம ஜென்ம பூமி வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள், வாதாடிய வழக்கறிஞர்கள் ஆகியோருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது.
இது தவிர, இறந்த கர சேவகர்களின் குடும்ப உறுப்பினர்கள், ராம் மந்திர் இயக்கத்தின் தலைவர்களின் குடும்ப உறுப்பினர்கள், இந்து துறவிகள், பழங்குடி சமூகங்களைச் சேர்ந்தவர்கள், செய்தித்தாள்கள், தொலைக்காட்சி சேனல்களின் முக்கிய நபர்கள், நோபல் பரிசு, பாரத ரத்னா, பரம்வீர் சக்ரா, பத்ம விருதுகள் ஆகியோரும் அழைப்புப் பட்டியலில் இடம்பெற்றிருக்கிறார்கள்.
மேலும், உச்ச நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற தலைமை நீதிபதிகள், இராணுவ முப்படைகளின் ஓய்வு பெற்ற தலைவர்கள், முன்னாள் தூதுவர்கள், நிர்வாக அதிகாரிகள், புத்திஜீவிகள், விளையாட்டு வீரர்கள், முக்கிய அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் தொழில்முனைவோர் ஆகியோரும் அழைக்கப்பட்டிருக்கிறார்கள்.
அதேபோல, நாட்டின் உலகளாவிய நிலையை மேம்படுத்துவதில் முக்கியப் பங்கு வகிக்கும் புலம்பெயர்ந்த இந்தியர்களில் இருந்து மொத்தம் 55 பேர், கிட்டத்தட்ட 50 நாடுகளில் இருந்து அழைக்கப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.