இந்தியா – வங்கதேச எல்லையைப் போல், இந்தியா – மியான்மர் எல்லையிலும் கம்பி வேலி அமைக்கப்படும். இதன் மூலம் இரு நாட்டு எல்லை வழியாக மக்கள் சுதந்திரமாக செல்லத் தடை விதிக்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்திருக்கிறார்.
அண்டை நாடான மியான்மரில் இராணுவ ஆட்சி நடைபெற்று வருகிறது. இதனால், இராணுவத்துக்கும் ஆயுதக் குழுக்களும் இடையே உள்நாட்டுப் போர் வெடித்திருக்கிறது. தற்போது போர் தீவிரமடைந்திருக்கும் நிலையில், அந்நாட்டு இராணுவ வீரர்கள் மிசோராம் மாநிலத்தில் அடைக்கலம் புகுந்து வருகின்றனர்.
மேலும், இராணுவ வீரர்கள் தங்கி இருந்த முகாமை ஆயுதக்குழு கைப்பற்றி இருக்கிறது. எனவே, அம்முகாமில் இருந்த 600 இராணுவ வீரர்கள் எல்லை தாண்டி வந்து மிசோராம் மாநிலத்தின் லாங்ட்லாய் மாவட்டத்தில் அடைக்கலம் புகுந்தனர். இவர்கள் அஸ்ஸாம் ரைபிள்ஸ் முகாமில் தங்க வைக்கப்பட்டிருக்கிறார்கள்.
அதோடு, மியான்மர் இராணுவத்தினர் தாக்குதலை சமாளிக்க முடியாமல் சில ஆயுதக் குழுக்களும் எல்லை தாண்டி வந்து மிசோராம் மாநிலத்தில் தஞ்சமடைகின்றனர். இவர்களை மியான்மர் இராணுவ வீரர்கள் மிசோராம் மாநிலத்துக்குள் புகுந்து வேட்டையாடி வருகின்றனர்.
இதைத் தொடர்ந்து, மிசோராம் மாநிலத்தில் நிலவும் சூழல் மற்றும் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன், முதல்வர் லால்து ஹோமா ஆலோசனை நடத்தினார். இந்த சூழலில்தான், இந்தியா – மியான்மர் எல்லையில் கம்பி வேலி அமைக்கப்படும் என்று அமித்ஷா கூறியிருக்கிறார்.
அஸ்ஸாம் மாநிலம் கௌகாத்தியில் அஸ்ஸாம் காவல்துறை கமாண்டோக்களின் “பாசிங் அவுட்” அணிவகுப்பு நடைபெற்றது. இதில், மத்திய உள்துறை அமைச்சர் கலந்து கொண்டு பேசுகையில், “இந்தியா – மியான்மர் எல்லையில் வேலி அமைக்கும் பணி விரைவில் தொடங்கும். இதன் மூலம் இந்தியா – மியான்மர் எல்லையில் மக்கள் சுதந்திரமாக நடமாடுவது கட்டுப்படுத்தப்படும்.
பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் ஆட்சியில் நாட்டில் சட்டம் ஒழுங்கு கணிசமாக மேம்பட்டுள்ளது. பிரதமர் மோடியின் கீழ் உள்நாட்டுப் பாதுகாப்பு வெகுவாக மேம்பட்டுள்ளது. காங்கிரஸ் ஆட்சியின்போது இது மிகவும் சிக்கலாக இருந்தது. அஸ்ஸாமில் ஏறக்குறைய அனைத்து கிளர்ச்சிக் குழுக்களும் ஆயுதங்களைக் கீழே போட்டு விட்டன.
இராமர் கோவில் கும்பாபிஷேகம் அனைத்து நாட்டு மக்களுக்கும் பெருமை சேர்க்கும் விஷயம். 2047-ம் ஆண்டுக்குள் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றும் பிரதமர் நரேந்திர மோடியின் கனவிற்கு இது தொடக்கமாக இருக்கும். காங்கிரஸ் ஆட்சியில் ஏற்பட்ட கிளர்ச்சியால் குடும்ப உறுப்பினர்களை இழந்த அஸ்ஸாம் மக்கள் ராகுல் காந்தியின் நியாய யாத்திரைக்கு எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்” என்று கூறியிருக்கிறார்.