மதுபானத்தில் இருந்து விமான எரிபொருள் தயாரிக்கும் முதல் முன்னோடித் திட்டத்தை, மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி புனேயில் தொடங்கி வைத்தார்.
ஆல்கஹாலில் இருந்து விமான எரிபொருள் தயாரிக்கும் முதல் முன்னோடி தொழில்நுட்பத் திட்டம் இந்தியாவில் தொடங்கப்பட்டிருக்கிறது. இத்திட்டம் புனே அருகே உள்ள பிரன்குட் தொழிற்பேட்டையில் உள்ள பிரஜ் உத்யோக் குழுமத்தின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் துறையில் அமைக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தை மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில், பிரஜ் தலைவர் பிரமோத் சௌத்ரி, இந்தியன் ஆயில் மற்றும் பிற எண்ணெய் நிறுவனங்களின் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, “இத்திட்டம் நிலையான உயிரியல் விமான எரிபொருள் அல்லது நிலையான விமான எரிபொருளை உற்பத்தி செய்யும். இந்த பயோ ஏவியேஷன் எரிபொருளுக்கு உலகச் சந்தையில் அதிக கிராக்கி இருக்கிறது. இதற்குத் தேவையான மூலப்பொருட்களை வழங்குவது பெரும் சவாலாக உள்ளது.
உயிரி எரிபொருளுக்காக உலகெங்கிலும் உள்ள பெரும்பாலான நாடுகள் இந்தியாவிடம் பெரும் எதிர்பார்ப்புகளைக் கொண்டுள்ளன. பிரேசிலுக்கு முன் இந்தியாவில் இத்திட்டத்தை அமைத்ததற்காக பிரஜ் உத்யோக் குழுமத்தின் பொறியாளர்களுக்கு வாழ்த்துகள். இத்திட்டம் உண்மையிலேயே உலகிற்கு முன்னோடியாக இருக்கும்” என்று நம்பிக்கை தெரிவித்தார்.
திறப்பு விழா முடிந்ததும், அமைச்சர் மற்ற அதிகாரிகளுடன் இணைந்து திட்டத்தை பார்வையிட்டதுடன், அதிநவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது குறித்தும் திருப்தி தெரிவித்தார்.
கடந்த ஆண்டு ஆல்கஹாலில் இருந்து தயாரிக்கப்பட்ட பயோ ஏவியேஷன் எரிபொருளைப் பயன்படுத்தி புனேயில் இருந்து டெல்லிக்கு விமானம் இயக்கப்பட்டது. அப்போது, அந்த விமானத்தை டெல்லி விமான நிலையத்தில் அமைச்சர் பூரி வரவேற்றார்.
இந்தியாவில் பயன்படுத்தப்படும் மொத்த விமான எரிபொருளில் குறைந்தபட்சம் 1 சதவீதத்தையாவது இந்த நிலையான பயோ ஏவியேஷன் எரிபொருளுடன் கலந்தாலும், ஒவ்வொரு ஆண்டும் குறைந்தது 14 கோடி லிட்டர் உயிரி எரிபொருள் தேவைப்படும். ஆகவே, எதிர்காலத்தில் இந்த உயிரி எரிபொருள் உற்பத்தித் தொழிலுக்கு மிகப்பெரிய வாய்ப்பு இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.