அரிச்சல்முனையை தொடர்ந்து கோதண்டராமர் கோவிலில் பிரதமர் மோடி சாமி தரிசனம் செய்தார்.
கோதண்டராமர் கோவில் ராமேஸ்வரத்திலிருந்து தனுஷ்கோடி செல்லும் வழியில் 12 கி.மீ. தூரத்தில், வங்காள விரிகுடா, மன்னார் வளைகுடா ஆகிய இரு கடல்களுக்கு நடுவில் தனுஷ்கோடி தீவில் அமைந்துள்ளது.
ராவணனை போரில் வென்று சீதை, ராவணனின் தம்பி விபீஷணன் ஆகியோருடன் ராமர் மீண்டும் திரும்புகிறார். ராமேஸ்வரத்திற்கு வந்ததும் இந்த இடத்தில் தான் விபீஷணருக்கு பட்டாபிஷேகம் செய்யப்பட்டது. ராமர் கையில் வில்லுடன் இங்கே காட்சி தருவதால் கோதண்டராமர் என்று அழைக்கப்படுகிறார். கோதண்டராமர் கோயிலில் ராமர், இலக்குவன், சீதை ஆகியோர் உற்சவ மூர்த்திகளாக காட்சி தருகின்றனர்.
இந்நிலையில், நேற்று இரவு ராமேஸ்வரம் ராமகிருஷ்ண மடத்தில் தங்கிய பிரதமர் மோடி இன்று காலை அரிச்சல்முனை சென்றார். கூடைகளில் இருந்த பல வண்ண பூக்களை கடற்கரையில் வைத்து பூஜை செய்த பிரதமர், கடற்கரையில் அமர்ந்து தியானம் செய்தார்.
அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவுக்காக 11 நாட்கள் விரதம் கடைபிடித்து வரும் பிரதமர் மோடி, அரிச்சல் முனையில் இருந்து தீர்த்தம் எடுத்து செல்கிறார். மேலும் அங்கு உள்ள புனித தூணிற்கும் பிரதமர் மோடி மலர்தூவி மரியாதை செய்தார்.
இதனைத்தொடர்ந்து கோதண்டராமர் கோவிலுக்கு சென்ற பிரதமர் மோடி அங்கு வழிபாடு செய்தார். அங்கு நடைபெற்ற பூஜையிலும் அவர் பங்கேற்றார். பின்னர் ஹெலிகாப்டர் மூலம் பிரதமர் மோடி மதுரை புறப்பட்டு சென்றார்.
அங்கிருந்து தனி விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு செல்கிறார்.டெல்லி செல்லும் பிரதமர் மோடி அங்கிருந்து அயோத்தி செல்கிறார். அயோத்தியில் நாளை நடைபெறும் ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவில் பிரதமர் மோடி பங்கேற்கிறார்.