அயோத்தி இராமர் கோவில் பிரான் பிரதிஷ்டை விழாவை முன்னிட்டு, ஜனவரி 22-ம் தேதி பொது விடுமுறை அறிவித்ததற்கு எதிராகத் தொடரப்பட்ட பொதுநல மனுவை மும்பை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டிருக்கிறது.
உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் புதிதாக இராமர் கோவில் கட்டப்பட்டு வருகிறது. இக்கோவில் கும்பாபிஷேகம் மற்றும் இராம் லல்லா சிலை பிரான் பிரதிஷ்டை விழா நாளை (ஜனவரி 22-ம் தேதி) நடைபெறவிருக்கிறது.
இதையொட்டி, பல்வேறு மாநிலங்கள் விடுமுறை அறிவித்து வருகின்றன. சில மாநிலங்கள் அரை நாள் விடுமுறை அறிவித்திருக்கின்றன. அந்த வகையில், மகாராஷ்டிர மாநில அரசு ஜனவரி 22-ம் தேதி பொது விடுமுறை தினமாக அறிவித்தது.
இந்த நிலையில், மகாராஷ்டிரா அரசின் இந்த அறிவிப்புக்கு எதிராக சட்டக் கல்லூரி மாணவர்கள் 4 பேர் மும்பை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்குத் தொடர்ந்தனர். அந்த மனுவில், “அரசு வெளிப்படையாக ஒரு குறிப்பிட்ட மதத்திற்கு ஆதரவு அளிப்பதும், அதைக் கொண்டாடுவதும், இராமர் கோவில் சிலை பிரதிஷ்டையில் பங்கேற்று நடத்துவதும் இந்தியாவின் மதச்சார்பற்ற கொள்கைகளின் மீதான நேரடித் தாக்குதல்.
பொது விடுமுறைகளை அறிவிப்பது தொடர்பான முடிவுகளை, அதிகாரத்தில் உள்ள கட்சியின் விருப்பத்திற்கு ஏற்றார்போல் மாற்றிக் கொள்ள முடியாது. பொதுவிடுமுறை என்பது தேச பக்தர்களை நினைவுகூர்தல் போன்ற நிகழ்வுகளுக்கு மட்டுமே அறிவிக்கலாம். இராமர் கோவில் திறப்பு விழாவிற்கு விடுமுறை அளிப்பது ஒரு குறிப்பிட்ட சமூகத்திற்கு ஆதரவாக அரசு செயல்படுவதாகக் காட்டுகிறது” என்று குற்றம்சாட்டி இருந்தனர்.
இந்த வழக்கு இன்று (ஞாயிற்றுக்கிழமை) விசாரணைக்கு வந்தது. இதை விசாரித்த மும்பை உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஜி.எஸ். குல்கர்னி மற்றும் நீலா கோகலே ஆகியோர் அடங்கிய சிறப்பு அமர்வு, இந்த வழக்கு அரசியல் உள்நோக்கம் கொண்டது என்று கூறி பொதுநல மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.