காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைக்கும் ஆம் ஆத்மியின் முடிவை எதிர்த்து அக்கட்சியில் இருந்து விலகிய அசோக் தன்வார், டெல்லியில் ஹரியானா முதல்வர் மனோகர் லால் கட்டார் மற்றும் பா.ஜ.க. தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா ஆகியோர் முன்னிலையில் பா.ஜ.க.வில் இணைந்திருக்கிறார்.
வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க.வுக்கு எதிராக, எதிர்கட்சிகள் ஒன்றிணைந்து “இண்டி” கூட்டணியை அமைத்திருக்கின்றன. இக்கூட்டணியில் ஆம் ஆத்மி கட்சியும் இணைந்திருக்கிறது. இந்த சூழலில், நாடாளுமன்றத் தேர்தலுடன் ஹரியானா மாநில சட்டமன்றத்துக்கும் தேர்தல் நடைபெறவிருக்கிறது.
இத்தேர்தலிலும் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கும் முடிவில் ஆம் ஆத்மி கட்சி இருக்கிறது. இது அக்கட்சியிலுள்ள பல்வேறு நிர்வாகிகளுக்கும் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது. காரணம், ஆம் ஆத்மி கட்சியிலுள்ள பலரும் காங்கிரஸ் கட்சியிலிருந்து வெளியேறியவர்கள்தான்.
ஆகவே, காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைக்கும் ஆம் ஆத்மி கட்சியின் முடிவை எதிர்த்து அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகளில் ஒருவரான அசோக் தன்வர் கடந்த வியாழக்கிழமை விலகினார். இது தொடர்பாக ஆம் ஆத்மி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜரிவாலுக்கு தன்வர் ஒரு கடிதம் அனுப்பி இருக்கிறார்.
அக்கடிதத்தில், “தற்போதைய அரசியல் சூழ்நிலை மற்றும் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியுடனான உங்கள் கூட்டணியின் பார்வையில், ஆம் ஆத்மி கட்சியின் ஹரியானா மாநில தேர்தல் பிரசாரக் குழுத் தலைவராகத் தொடர எனது நெறிமுறைகள் என்னை அனுமதிக்காது.
எனவே, ஆம் ஆத்மி கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்பட மற்ற அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் நான் விலகிக்கொள்கிறேன். மேலும், இந்த நாட்டின் பொறுப்புள்ள குடிமகனாக மாணவப் பருவத்தில் இருந்தே தீவிர அரசியலில் ஈடுபட்டு வருகிறேன். அரசியல் சாசனம், நாடு மற்றும் மக்களை முதன்மையாக நம்புகிறேன்” என்று தெரிவித்திருக்கிறார்.
இந்த நிலையில், அசோக் தன்வார் டெல்லியில் ஹரியானா முதல்வர் மனோகர் லால் கட்டார் மற்றும் பா.ஜ.க. தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா ஆகியோர் முன்னிலையில் பா.ஜ.க.வில் இணைந்திருக்கிறார். ஆம் ஆத்மி கட்சியில் இருந்து விலகி பா.ஜ.க.வில் தன்வர் இணைந்திருப்பது பா.ஜ.க.வுக்கு கூடுதல் பலம் சேர்க்கும் என்று நம்பப்படுகிறது.