ஸ்ரீ ராமர் ஆலய பிராண பிரதிஷ்டை விழாவுக்காக பிரதமர் நரேந்திர மோடி 11 நாள் சிறப்பு வழிபாடுகள் மற்றும் விரதங்களை மேற்கொண்டார். பல்வேறு புனிதத் தலங்களுக்குச் சென்று பல்வேறு மொழிகளில் ராமாயண பாராயணங்களைப் பிரதமர் மோடி கேட்டார்!
1. ஸ்ரீ காலாராம் கோயில், நாசிக்
2024 ஜனவரி 12, அன்று பிரதமர் மகாராஷ்டிராவின் நாசிக்கில் அமைந்துள்ள காலா ராம் மந்திரில் பிரார்த்தனை செய்து வழிபட்டார்.
அவர் ஸ்ரீ ராம் குண்த்-தில் வழிபாடு மற்றும் பூஜை செய்தார். ஸ்ரீ ராமர் அயோத்திக்கு வெற்றிகரமாக திரும்பியதை சித்தரிக்கும் ராமாயணப் பகுதி மராத்தி மொழியில் பிரதமருக்கு வாசிக்கப்பட்டது. துறவி ஏக்நாத் ஜி மராத்தியில் எழுதிய பவார்த் ராமாயணத்தின் ஸ்லோகங்களையும் பிரதமர் கேட்டார்.
2. வீரபத்ரர் கோயில், லேபக்ஷி, ஆந்திரப் பிரதேசம்
2024 ஜனவரி 16 செவ்வாய்க்கிழமை அன்று, பிரதமர் ஆந்திரப் பிரதேசத்தில் அமைந்துள்ள புட்டபர்த்தியின் லேபக்ஷியில் உள்ள வீரபத்ரர் கோவிலுக்குச் சென்று வழிபட்டார்.
தெலுங்கு மொழியில் ரங்கநாத ராமாயணத்தைக் கேட்ட பிரதமர், ஆந்திரப் பிரதேசத்தின் பண்டைய நிழல் பொம்மலாட்டக் கலை வடிவமான தொள பொம்மலாட்டத்தில் சித்தரிக்கப்பட்ட ஜடாயுவின் கதையைப் பார்த்தார்.
3. அருள்மிகு குருவாயூர் கோயில், திருச்சூர், கேரளா
கேரள மாநிலம் குருவாயூரில் உள்ள குருவாயூர் கோவிலுக்கும் பிரதமர் சென்று வழிபாடு நடத்தினார்.
4. திரிபிரயார் ஸ்ரீ ராமசுவாமி கோயில், திருச்சூர், கேரளா
பிரதமர் நரேந்திர மோடி 2024 ஜனவரி 17 அன்று கேரளாவின் திரிபிரயாரில் உள்ள ஸ்ரீ ராமசுவாமியின் தெய்வீக இரடத்திற்கு விஜயம் செய்தார். ஸ்ரீராமசுவாமி கோயிலில் தரிசனம் மற்றும் பூஜை செய்தார். கலை நிகழ்ச்சிகளையும் பிரதமர் பார்வையிட்டுக் கலைஞர்களைப் பாராட்டினார்.
5. அருள்மிகு ரங்கநாதசுவாமி திருக்கோயில், திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு
2024 ஜனவரி 20 ஆம் தேதி, பிரதமர் நரேந்திர மோடி தமிழ்நாட்டில் உள்ள ஸ்ரீ ரங்கநாதசுவாமி புனித ஆலயத்திற்கு வருகை தந்தார். புகழ்பெற்ற கம்பர் தமது தலைசிறந்த படைப்பை முதன்முதலில் உலகிற்கு வெளிப்படுத்திய புனித இடமான ஸ்ரீரங்கத்தில், கம்ப ராமாயணத்தின் கவிதை பாடலையும் அவர் கேட்டார்.
6. அருள்மிகு ராமநாதசுவாமி திருக்கோயில், இராமேஸ்வரம்
ஸ்ரீ ரங்கநாதசுவாமி கோயிலில் பூஜை செய்த பின்னர், பிரதமர் நரேந்திர மோடி தமிழ்நாட்டின் ராமேஸ்வரத்தில் உள்ள அருள்மிகு ராமநாதசுவாமி புனித ஆலயத்தில், பன்னிரண்டு ஜோதிர்லிங்கங்களில் ஒன்றாகப் போற்றப்படும் இறைவனுக்கு பக்தியுடன் மரியாதை செலுத்தி, வழிபாடு நடத்தினார். மாலையில் கோயில் வளாகத்தில் பஜனை நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்.
7. தனுஷ்கோடி கோதண்டராமசுவாமி கோயில்
இன்று (21-01-2024) தனுஷ்கோடியில் உள்ள கோதண்டராம சுவாமி கோவிலில் பிரதமர் வழிபாடு மற்றும் பூஜை மேற்கொண்டார். தனுஷ்கோடிக்கு அருகில், ராமர் பாலம் கட்டப்பட்ட இடம் என்று கூறப்படும் அரிச்சல் முனைக்கும் பிரதமர் சென்று வழிபட்டார்.