அயோத்தி இராமர் கோவில் கும்பாபிஷேகம் விழா இந்தியாவை புதிய உச்சத்திற்கு கொண்டு செல்லும் என்று பாரதப் பிரதமர் நரேந்திர மோடி கூறியிருக்கிறார்.
உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தி இராம ஜென்ம பூமியில், 1,800 கோடி ரூபாய் செலவில் மிகவும் பிரம்மாண்டமாக ஸ்ரீராமர் கோவில் கட்டப்பட்டு வருகிறது. இக்கோவில் கும்பாபிஷேகம் மற்றும் இராம் லல்லா சிலை பிரதிஷ்டை ஆகியவை இன்று நடைபெற இருக்கிறது.
இவ்விழாவில் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு இராம் லல்லா சிலையை பிரதிஷ்டை செய்கிறார். இதையொட்டி, அயோத்தி நகரமே விழாக்கோலம் பூண்டிருக்கிறது. நகரம் முழுவதும் வண்ண பூக்களாலும், மின்விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்டு, ஜொலிக்கிறது.
இந்த நிலையில்தான், இராமர் கோவில் கும்பாபிஷேகம் இந்தியாவை புதிய உச்சத்திற்குக் கொண்டு செல்லும் என்ற நம்பிக்கை உள்ளதாக பாரதப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்திருக்கிறார். இதுகுறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றையும் வெளியிட்டிருக்கிறார்.
அப்பதிவில், “இந்த வரலாற்றுத் தருணம் இந்திய பாரம்பரியம் மற்றும் கலாச்சாரத்தை மேலும் செழுமைப்படுத்தி நமது வளர்ச்சிப் பயணத்தை புதிய உயரத்திற்குக் கொண்டு செல்லும் என்று நான் நம்புகிறேன்” என்று தெரிவித்திருக்கிறார்.