சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெற்று வந்த, 47-வது புத்தகக் கண்காட்சி நேற்றுடன் நிறைவடைந்த நிலையில், சுமார்18 கோடி ரூபாய்க்கு புத்தகங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.
சென்னையில் ஆண்டுதோறும் பல்வேறு கண்காட்சிகள் நடைபெறுவது வழக்கம். குறிப்பாக, வாசகர்கள், பொதுமக்கள் உட்பட அனைத்து தரப்பினரும் ஆர்வமாக எதிர்பார்த்து காத்திருப்பது, சென்னை புத்தகக் கண்காட்சிக்காக தான்.
இந்த ஆண்டுக்கான புத்தகக் கண்காட்சி கடந்த 3-ஆம் தேதி, சென்னை ஒய்எம்சிஏ மைதானத்தில் தொடங்கியது. கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு கூடுதல் அரங்குகள் அமைக்கப்பட்டு இருந்தன. இதில், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை, விரும்பிப் படிக்கும் சிறுகதைகள், நாவல்கள், இலக்கிய – இலக்கண நூல்கள், வாழ்க்கை வரலாறு, கவிதைகள் தொடர்பான புத்தகங்கள் என பல்வேறு புத்தகங்கள் இருந்தன.
சென்னையில் ஆண்டுக்கு ஒரு முறை நடைபெறும் புத்தகக் கண்காட்சி என்பதால், சென்னை மக்கள் மட்டுமின்றி வெளி மாவட்டங்களைச் சேர்ந்த மக்களும் புத்தகங்களை ஆர்வத்துடன் வாங்கி சென்றனர்.
கடந்த 19 நாட்களாக நடைபெற்று வந்த புத்தகக் கண்காட்சி நேற்றுடன் நிறைவு பெற்றது. சென்னை புத்தகக் கண்காட்சிக்கு அதிக அளவில் மாணவர்கள் வந்திருந்ததாகவும், சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை மொத்தமாக 15 இலட்சம் வாசகர்கள் வந்ததாகவும், சுமார் 18 கோடி ரூபாய்க்கு புத்தகங்கள் விற்கப்பட்டுள்ளதாகவும் பபாசி தலைவர் தெரிவித்துள்ளார்.