வெளிநாடுகளுக்குச் சென்று திருமணங்களை நடத்துவது பொருத்தமாக இருக்குமா? இதனால் இந்தியாவின் வளம் எந்த அளவுக்கு வெளியே செல்கிறது? எனவே, வெளிநாடுகளுக்குச் சென்று திருமணம் செய்யும் பழக்கத்தைத் தவிர்த்து, இந்தியாவிலேயே திருமணம் செய்வதை ஊக்குவிக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தி இருக்கிறார்.
குஜராத் மாநிலம் அம்ரேலி நகரில் கோடல்தம் அறக்கட்டளை சார்பில் புற்றுநோய் சிகிச்சை மருத்துவமனை கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி காணொலி வாயிலாகப் பங்கேற்று, மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டினார்.
தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, “புற்றுநோய் போன்ற தீவிர நோய் பாதிப்புகளுக்கு சிகிச்சை பெறுவது அனைவருக்கும் சவாலான விஷயம். ஆகவே, புற்றுநோய் பாதிப்புக்கான சிகிச்சை பெற மக்கள் சிரமங்களைச் சந்திக்கக் கூடாது என்பதற்காக புதிதாக 30 மருத்துவமனைகள் உருவாக்கப்பட்டிருக்கிறது.
மேலும், புற்றுநோய் சிகிச்சைக்கான மருந்துகளும் மலிவு விலையில் கிடைப்பதை உறுதிப்படுத்துவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. தவிர, புற்றுநோய் பாதிப்பை முன்கூட்டியே கண்டறிவது, பாதிப்பிலிருந்து விரைந்து மீள வாய்ப்பாக அமையும் என்பதால், கிராமங்கள் அளவில் 1.5 லட்சத்துக்கும் அதிகமான ஆயுஷ்மான் சுகாதார மையங்கள் கட்டப்பட்டிருக்கின்றன. இந்த மையங்கள் மூலம் பெண்களும் பயனடைந்து வருகின்றனர்.
மக்களுக்கு மலிவு விலையில் உயிர் காக்கும் மருந்துகள் கிடைப்பதை உறுதிப்படுத்தும் வகையில், நாடு முழுவதும் 10,000 மக்கள் மருந்தகங்களை மத்திய அரசு திறந்துள்ளது. இந்த மருந்தகங்களில் 80% தள்ளுபடி விலையில் மருந்துகள் விற்பனை செய்யப்படுகின்றன. இதன் எண்ணிக்கை விரைவில் 25,000 என்று உயா்த்தப்படும்.
இது ஒருபுறம் இருக்க, தற்போது வெளிநாடுகளுக்குச் சென்று திருமணம் செய்வது பிரபலமாகி வருகிறது. அவ்வாறு வெளிநாடுகளுக்குச் சென்று திருமணங்களை நடத்துவது பொருத்தமாக இருக்குமா? இதனால் இந்தியாவின் வளம் எந்த அளவுக்கு வெளியே செல்கிறது? நமது நாட்டிலேயே திருமணங்களை நடத்த முடியாதா?
இவ்வாறு வெளிநாடுகளுக்குச் சென்று திருமணங்களை நடத்தும் வியாதி, உங்களுடைய சமூகத்திலும் நுழையாத வகையிலான சூழலை உருவாக்க வேண்டும். சமூகத்தால் போற்றப்படும் தெய்வத்தின் பாதத்தில் ஏன் திருமங்களை நடத்தக் கூடாது? எனவே, ‘இந்தியாவில் தயாரிப்பு’ இயக்கம் மூலம், உள்நாட்டிலேயே உற்பத்தியை ஊக்குவிப்பது போன்று ‘இந்தியாவில் திருமணம்’ என்ற பழக்கத்தை நாம் ஊக்குவிக்க வேண்டும்.
அதேபோல, இந்தியாவிற்குள்ளேயே சுற்றுலாவை ஊக்குவிக்கவும் மக்கள் உதவ வேண்டும். முடிந்தவரை, முதலில் நாட்டிற்குள் நாம் சுற்றுலா செல்ல வேண்டும். பயணத்தை நீங்கள் விரும்புகிறீர்கள் என்றால், உங்களுடைய நாட்டுக்குள் அதை மேற்கொண்டு, நாட்டினுள் சுற்றுலாவை ஊக்குவிக்க வேண்டும்.
மேலும், தண்ணீர் சேமிப்பு, எண்ம பரிவர்த்தனை, தூய்மை, இந்திய உற்பத்தி பொருள்களைப் பயன்டுத்துதல், இயற்கை விவசாயம், சிறுதானியங்கள் பயன்பாடு, உடற்பயிற்சி ஆகியவற்றையும் மக்கள் ஊக்குவிக்க வேண்டும்” என்றார்.