ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து மக்களிடம் கருத்து கேட்கப்பட்ட நிலையில், 81 சதவீதம் பேர் இத்திட்டத்திற்கு ஆதரவாக கருத்துகளை தெரிவித்துள்ளனர்.
இந்தியாவில் மக்களவைக்கும், மாநில சட்டசபைகளுக்கும் தனித்தனியாக தேர்தல்கள் நடத்தப்படுகின்றன. அவ்வாறு தனித்தனியாக தேர்தல்கள் நடத்தப்படுவதால், மக்களின் வரிப்பணம் வீணாவதோடு, வளர்ச்சி திட்டப் பணிகளும் பாதிக்கப்படுகின்றன. ஒரே நாடு ஒரே தேர்தல் நடத்தப்பட்டால், மக்களின் வரிப்பணம் சேமிக்கப்படுவதோடு, பல்வேறு வளர்ச்சி பணிகளும் வேகமாக நடக்கும்.
இந்தியாவில் ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ திட்டத்தை நடைமுறைப்படுத்த, பாரத பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு, தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. எனவே, இதற்கான சாத்தியக் கூறுகள் குறித்து ஆராய்வதற்காக முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில், உயர்மட்டக் குழு ஒன்று அமைக்கப்பட்டிருக்கிறது. இக்குழுவினர் சட்ட ஆணையம், அரசியல் கட்சிகள், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினரிடம் கருத்துகளை கேட்டறிந்து வருகிறார்கள்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை இக்குழுவின் மூன்றாவது குழு கூட்டம் நடந்தது. இதில் கடந்த ஜனவரி 15-ஆம் தேதி வரை ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ குறித்து 20 ஆயிரத்து 972 பேரிடம் கருத்துக்கள் பெறப்பட்டன. அவற்றில், 81 சதவீதம் பேர் ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்திற்கு ஆதரவாக கருத்துகள் தெரிவித்துள்ளனர்.
மேலும், 46 அரசியல் கட்சிகளிடம் இருந்தும் ஆலோசனைகள் கேட்கப்பட்ட நிலையில், இதுவரை 17 அரசியல் கட்சிகளிடம் இருந்து ஆலோசனைகள் பெறப்பட்டுள்ளதாக உயர்மட்டக் குழு தெரிவித்துள்ளது.