அயோத்தி ராமர் கோவில் நிகழ்ச்சியை சட்ட நடைமுறைக்கு உட்பட்டு நேரடி ஒளிபரப்பு செய்ய உரிய அனுமதி வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு உத்தரவிட்ட உச்சநீதிமன்றம், இதுதொடர்பாக ஜனவரி 29ஆம் தேதி பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது.
அயோத்தியில் ராமர் ப்ரான் பிரதிஷ்டை நிகழ்ச்சியை மாநிலம் முழுவதும் உள்ள கோவில்களில் நேரடியாக ஒளிபரப்ப தமிழக அரசு தடை விதித்துள்ளதாக உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
அதில் அனைத்து வகையான பூஜைகள், அன்னதானம் பஜனைகளையும் அரசாங்கம் தடை செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநில அரசு (காவல்துறை அதிகாரிகள் மூலம்) தன்னிச்சையாக அதிகாரத்தைப் பயன்படுத்துவது அரசியலமைப்பின் கீழ் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளை மீறுவதாகவும் என அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
இந்த மனு உச்ச நீதிமன்ற நீதிபதி சஞ்சீவ் கன்னா முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அயோத்தியில் ராமர் பிரான் பிரதிஷ்டையை முன்னிட்டு நேரடி ஒளிபரப்பு, பூஜைகள், அர்ச்சனைகள், அன்னதானம், பஜனைகள் நடத்த தடை இல்லை என தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.
வாய்மொழி உத்தரவை ஏற்று காவல்துறை செயல்படக்கூடாது. சட்டப்படி எதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளதோ அதை அனுமதிக்க வேண்டும்.அயோத்தி ராமர் கோவில் விழா நேரலை, ராமர் பெயரில் பூஜை ஆகியவற்றை வாய்மொழி உத்தரவைக் கொண்டு தடுக்கக்கூடாது. பிற சமூகத்தினர் வசிக்கிறார்கள் என்ற ஒரே காரணத்திற்காக அனுமதியை நிராகரிக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
அயோத்தி ராமர் கோவில் நிகழ்ச்சியை சட்ட நடைமுறைக்கு உட்பட்டு நேரடி ஒளிபரப்பு செய்ய உரிய அனுமதி வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு உத்தரவிட்ட உச்சநீதிமன்றம், இதுதொடர்பாக ஜனவரி 29ஆம் தேதி பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது.