தமிழ்நாட்டின் ஒருங்கிணைக்கப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலை, தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதாசாகு இன்று வெளியிட்டார்.
நாடாளுமன்ற தேர்தல் இந்த ஆண்டு நடக்க உள்ள நிலையில், தேர்தலுக்கான ஆயத்த பணிகளில் இந்திய தேர்தல் ஆணையம் மும்முரமாக ஈடுபட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, நாடு முழுவதும் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி, கடந்த அக்டோபர் 27-ஆம் தேதி முதல் டிசம்பர், 9 வரை நடந்தது.
தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில், பெயர் சேர்த்தல், நீக்கம் செய்தல், திருத்தம் மற்றும் முகவரி மாற்றம் தொடர்பாக, பல லட்சம் மனுக்கள் வந்தன. அவற்றை ஆய்வு செய்து, இறுதி வாக்காளர் பட்டியல், ஜனவரி, 5-ஆம் தேதி வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. பின்னர், தமிழகம் உட்பட 12 மாநிலங்களில், இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடும் தேதி, ஜனவரி 22-ஆம் தேதிக்கு மாற்றப்பட்டது.
இந்நிலையில், தமிழ்நாட்டில் இறுதி வாக்காளர் பட்டியலை சென்னை தலைமை செயலகத்திலிருந்து தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதாசாகு இன்று வெளியிட்டார். அதன்படி, 6 கோடியே 18 இலட்சத்து 90 ஆயிரத்து 34 வாக்காளர்கள் தமிழ்நாட்டில் மொத்தம் உள்ளனர். இதில், 3 கோடியே 14 இலட்சத்து 85 ஆயிரத்து 724 பெண் வாக்காளர்களும், 3 கோடியே 3 இலட்சத்து 96 ஆயிரத்து 330 ஆண் வாக்காளர்களும், 8 ஆயிரத்து 294 மூன்றாம் பாலின வாக்காளர்களும் உள்ளனர்.
18 முதல் 19 வயதுக்குட்பட்ட வாக்காளர்கள் 5 இலட்சத்து 26 ஆயிரத்து 205 பேரும், மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் 4 இலட்சத்து 32 ஆயிரத்து 805 வாக்காளர்களும் உள்ளனர்.
செங்கல்பட்டு மாவட்டத்திற்குட்பட்ட சோழிங்கநல்லூர் சட்டமன்றத் தொகுதி தமிழ்நாட்டிலேயே அதிக வாக்காளர்களைக் கொண்ட தொகுதியாக உள்ளது. தமிழ்நாட்டிலேயே குறைந்த அளவு வாக்காளர்கள் கொண்ட தொகுதியாக நாகப்பட்டினம் மாவட்டத்திற்குட்பட்ட கீழ்வேளூர் சட்டமன்றத் தொகுதி உள்ளது.
மேலும், 3 ஆயிரத்து 480 வெளிநாடுவாழ் வாக்காளர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.