அயோத்தியில் இராமர் கோவில் கட்டப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றிருக்கும் நிலையில், உங்களின் மற்றொரு சாதனைக்கு வாழத்துகள் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு நடிகர் விஷால் வாழ்த்துத் தெரிவித்திருக்கிறார்.
உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் 1,800 கோடி ரூபாய் செலவில், பிரம்மாண்டமாக இராமர் கோவில் கட்டப்பட்டு இன்று கும்பாபிஷேகம் மற்றும் பிரான் பிரதிஷ்டை விழா நடைபெற்றிருக்கிறது. இவ்விழாவில் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு இராம் லல்லா சிலையை பிரதிஷ்டை செய்தார்
மேலும், இக்கோவில் கட்டுவதற்கு பிரதமர் நரேந்திர மோடிதான் முழு முயற்சி எடுத்தார் என்பது அனைவரும் அறிந்ததே. 2014 தேர்தலின்போது பா.ஜ.க.வின் வாக்குறுதிகளில் அயோத்தி கோவிலும் இடம் பெற்றிருந்தது. ஆனால், நீதிமன்றத்தில் வழக்கு இருந்ததால், அதை நிறைவேற்ற முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், அயோத்தி கோவில் கட்டப்பட்டதற்கு பிரதமர் நரேந்திர மோடிக்கு நடிகர் விஷால் வாழ்த்துத் தெரிவித்திருக்கிறார். இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் விஷால் வெளியிட்டிருக்கும் பதிவில், “அன்புக்குரிய பிரதமர் நரேந்திர மோடி. உங்களின் மற்றொரு சாதனைக்கு வாழ்த்துகள். ஜெய் ஸ்ரீராம்.
இராமர் கோவில் இன்னும் பல ஆண்டுகள் நினைவுகூரப்படும். இந்த தருணத்திற்காக உயிர்த் தியாகம் செய்த அனைவருக்கும் தலைமுறை தலைமுறைகளாக இங்கு வந்து அஞ்சலி செலுத்துவார்கள்” என்று தெரிவித்திருக்கிறார்.
நடிகர் விஷால், தற்போது இயக்குனர் ஹரி இயக்கத்தில் உருவாகி வரும் ‘ரத்னம்’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இவருக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடிக்கிறார். மேலும், இப்படத்தில் கௌதம் மேனன், சமுத்திரகனி மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
இப்படத்தை தமிழ்த் திரைப்பட இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் கார்த்திக் சுப்பாராஜின் ‘ஸ்டோன் பெஞ்ச்’ தயாரிப்பு நிறுவனத்தோடு ஜீ ஸ்டுடியோஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கிறது. இப்படம் கோடையில் திரையரங்குகளில் வெளியாகுகிறது. இதையடுத்து படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.