ராமரை தரிசிக்க பக்தர்கள் வரும்போது அயோத்தி நகரம் தெய்வீகமாக காட்சியளிப்பதாக ஸ்ரீ ராம் ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ராவின் தலைமை அர்ச்சகர் ஆச்சார்யா சத்யேந்திர தாஸ் தெரிவித்துள்ளார்.
அயோத்தி ராமர் கோவிலில் குழந்தை ராமர் சிலை நேற்று பிரதிஷ்டை செய்யப்பட்டது. இதுதொடர்பாக ஸ்ரீ ராம் ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ராவின் தலைமை அர்ச்சகர் ஆச்சார்யா சத்யேந்திர தாஸ் செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது, குழந்தை ராமரை காண ஏராளமான பக்தர்கள் அயோத்தியில் குவிந்த வருவதாகவும், இதனால் கோவில் நகரம் திரேதா யுக் (இந்து மதத்தில் நம்பப்படும் நான்கு யுகங்களில் இரண்டாவது நிலை)நிலையை அடைந்த வருவதாக அவர் தெரிவித்தார். ராமரை தரிசனம் செய்ய 4,000 துறவிகளின் குழுவும் வந்துள்ளதாகவும், ஆனால் அனைவராலும் இன்று தரிசனம் செய்ய முடியாது என்றும் அவர் குறிப்பிட்டார்.
அயோத்தியில் இருந்து, நாடு முழுவதும் மாற்றம் வரும். அது மிகவும் அழகாக இருக்கும். மக்கள் அனைவரும் ஒற்றுமையாக வாழ்வார்கள். நல்லெண்ணத்துடன் வாழ்வோம். ராமரின் ஆசீர்வாதம் அனைவருக்கும் கிடைக்கும் என்றும் அவர் கூறினார்.
அயோத்தி கோவில் நடை பக்தர்களுக்கு இன்று காலை திறக்கப்பட்டது. நேற்று இரவு முதல் கோயில் வளாகத்திற்குச் செல்லும் ராமர் பாதையின் பிரதான நுழைவாயில் ஏராளமான பக்தர்கள் கூடி இருந்தனர். இன்று காலை கோவில் திறந்தவுடன் பக்தர்கள் முண்டியடித்துக்கொண்டு கோவிலுக்கு செல்ல முயன்றதால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது.