மின் நுகர்வோரின் வீடுகளின் கூரைகளில் சூரிய சக்தி அமைப்பை அதிக எண்ணிக்கையில் பயன்படுத்த தேசிய அளவிலான இயக்கத்தைத் தொடங்கப் பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார்.
அயோத்தியில், சூரியவம்சத்தைச் சேர்ந்த பகவான் ஸ்ரீ ராமரின் பிரதிஷ்டை விழாவில் பிரதமர் மோடி நேற்று பங்கேற்றார்.
பின்னர், புதுதில்லியில், ஒரு கோடி வீடுகளின் மேற்கூரையில் சூரிய மின்சக்தி அமைப்பை நிறுவுவதை நோக்கமாகக் கொண்ட “பிரதமரின் சூர்யோதயா யோஜனா” என்ற திட்டத்தைத் தொடங்குவதற்கான கூட்டத்திற்குத் பிரதமர் மோடி தலைமை வகித்தார்.
இந்தக் கூட்டத்தின் போது, ஒவ்வொரு வீட்டிலும் மின்சாரக் கட்டணத்தைக் குறைக்கும் நோக்கிலும், மின்சாரத் தேவைகளுக்குத் தற்சார்பு உடையவர்களாக அவர்களை மாற்றும் நோக்கிலும் சூரிய சக்தி மேற்கூரை அமைப்பை பயன்படுத்தலாம் என்று பிரதமர் மோடி கூறினார்.
பிரதமரின் சூர்யோதயா திட்டம், குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நபர்களுக்கு சூரியசக்தி மேற்கூரை அமைப்பதன் மூலம் மின்சாரம் வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. அத்துடன் உபரி மின்சார உற்பத்திக்குக் கூடுதல் வருமானமும் கிடைக்கும்.
வீடுகளைச் சேர்ந்த மின் நுகர்வோர், மேற்கூரை சூரிய மின்சக்தி அமைப்பை அதிகம் நிறுவுவதை ஊக்குவிக்க ஒரு பெரிய தேசிய இயக்கத்தைத் தொடங்க வேண்டும் என்றும் பிரதமர் நரேந்திர மோடி அறிவுறுத்தினார்.
ஏழை மற்றும் நடுத்தர மக்களின் மின்சாரக் கட்டணத்தைக் குறைப்பதும், எரிசக்தித் துறையில் இந்தியாவைத் தற்சார்புடைய நாடாக மாற்றுவதும் இந்தத் திட்டத்தின் நோக்கமாகும்.