நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிறந்த நாளை முன்னிட்டு அவரது உருவப்படத்திற்குப் பிரதமர் மோடி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
ஒடிசா மாநிலம் கட்டாக் நகரில் 1897 ஆம் ஆண்டு ஜனவரி 23 ஆம் நாள் பிறந்தவர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ். இரண்டாம் உலகப் போர் நடைபெற்ற போது, வெளிநாடுகளில் போர் கைதிகளாய் இருந்த நூற்றுக்கணக்கான இந்தியர்களை ஒன்றுதிரட்டி, இந்திய தேசிய ராணுவத்தை உருவாக்கி, ஆங்கிலேயருக்கு எதிராக போர் தொடுத்தவர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்.
1941 இல் சுதந்திர இந்திய மையம் என்ற அமைப்பைத் தொடங்கி, ஆசாத்ஹிந்த் என்ற வானொலி சேவையையும் உருவாக்கி, விடுதலைத் தாகத்தை, அங்கிருந்த இந்திய மக்களிடம் விதைத்தார். நாட்டுக்கு எனத் தனிக் கொடியை உருவாக்கி ஜன கண மன பாடலை தேசிய கீதமாகவும் அவர் அறிவித்தார்.
இந்நிலையில் நேதாஜி சுபாஷ் சந்திபோஸின் 127வது பிறந்த தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி சம்விதன் சதானில் உள்ள நேதாஜி படத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
















