அயோத்தியில் குழந்தை ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்ட நிலையில், நேற்று பிறந்த குழந்தைகளுக்கு ராமர் மற்றும் சீதையின் பெயர்கள் வைக்கப்பட்டுள்ளது.
அயோத்தி ராமர் கோவிலில் குழந்தை ராமர் சிலை நேற்று பிரதிஷ்டை செய்யப்பட்டது. இதனையொட்டி நாட்டின் பல்வேறு மருத்துவமனைகளில் பிறந்த குழந்தைகளுக்கு ராமர் மற்றும் சீதையின் பெயர்கள் வைக்கப்பட்டுள்ளது.
இது ஒரு நல்ல நாள். ராமர் அயோத்திக்கு திரும்பிய வரலாற்று சிறப்புமிக்க நாளில் எங்கள் குடும்பத்தினர் பிரசவம் பார்க்க விரும்பினர். இந்த நல்ல நாளில் எனக்கு பெண் குழந்தை பிறந்தது. எங்கள் குழந்தைக்கு சீதா என்று பெயரிட திட்டமிட்டுள்ளோம் என அஷ்வினி பாக்லி என்பவர் தெரிவித்துள்ளார்.
ராமரின் பக்தராக இருப்பதால், எனக்கு பிறந்த குழந்தைக்கு ஸ்ரீராம் என பெயரிட முடிவு செய்துள்ளோம் என்று 30 வயதான போரம்மா தெரிவித்துள்ளார். இவருக்கு கர்நாடக மாநிலம் விஜயபுராவில் உள்ள ஜேஎஸ்எஸ் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் நேற்று பிரசவம் நடைபெற்றது.
கர்நாடகாவில் உள்ள ஒரு மருத்துவமனையில் ஜனவரி 22 ஆம் தேதி பிரசவம் பார்க்க 50க்கும் மேற்பட்ட கர்ப்பிணிப் பெண்களிடமிருந்து சிறப்பு கோரிக்கைகள் வந்ததாகவும், 20 பிரசவங்கள் நேற்று பார்க்கப்பட்டதாகவும் மருத்துவமனை ஒன்று தெரிவித்துள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூர் கணேஷ் சங்கர் வித்யார்த்தி நினைவு மருத்துவக் கல்லூரியில் நேற்று 25 பிரசவங்கள் பார்க்கப்பட்டதாகவும், அதில் பெரும்பாலான குழந்தைகளுக்கு ராமர் மற்றும் சீதையின் பெயர்கள் வைக்கப்பட்டுள்ளதாக மருத்துவமனை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
ஆண் குழந்தைகளுக்கு ராகவ், ராகவேந்திரா, ரகு, மற்றும் ராமேந்திரா போன்ற ராமரின் பிற பெயர்களும் வைக்கப்பட்டது. பல பெண் குழந்தைகளுக்கு ஜானகி மற்றும் சீதா என்று பெயரிடப்பட்டது.
உத்தரப்பிரதேச மாநிலம் ஃபிரோசாபாத்தில் இஸ்லாமிய குடும்பத்தில் பிறந்த ஆண் குழந்தைக்கு ‘ராம் ரஹீம்’ என்று பெயர் சூட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.