அடுத்த பிரதமரும் நரேந்திர மோடிதான். அவரை அந்த ஸ்ரீராமனே மீண்டும் ஆட்சியில் அமர்த்துவார். எதிர்த்து நிற்பவர்கள் டெபாசிட் இழப்பார்கள் என்று மதுரை ஆதீனம் கூறியிருக்கிறார்.
உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் பிரம்மாண்டமாக இராமர் கோவில் கட்டப்பட்டு நேற்று திறப்பு விழா மற்றும் இராம் லல்லா சிலை பிரான் பிரதிஷ்டை விழா ஆகியவை நடைபெற்றது. பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு இராம் லல்லா சிலையை பிரான் பிரதிஷ்டை செய்தார்.
இந்த நிகழ்ச்சி நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது. அந்த வகையில், இராமநாதபுரத்திலும் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மதுரை ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் கலந்துகொண்டு கண்டுகளித்தார்.
இதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய மதுரை ஆதீனம், “பிரதமர் மோடி ஏன் மீண்டும் ஆட்சிக்கு வருவார் என்று கேட்கின்றனர். திருமூலர் ஒன்றே குலம், ஒருவனே தேவன் என்றார். அது இன்று நிரூபிக்கப்பட்டிருக்கிறது. இலங்கையில் கொத்துக்கொத்தாக தமிழர்களை கொன்று குவித்தனர்.
ராஜீவ் காந்தி தலைமையில் மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் அரசு இந்திய இராணுவத்தை அனுப்பி இலங்கையில் ராஜபக்சே என்ற ரத்த பக்சே அரசுடன் சேர்ந்து இந்த படுபாதகத்தை செய்தது. அன்று யாரும் ஏன் என்று கேட்கவில்லை. ஜாலியன் வாலாபாக் படுகொலையை விட மோசமாக தமிழர்களை கொலை செய்தனர்.
ஆனால், பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு பிரதமர் மோடி இன்று வீடுகளை கட்டி கொடுத்திருக்கிறார். மேலும், பல்வேறு உதவிகளையும் செய்திருக்கிறார். தவிர, பிரதமர் மோடி ஆன்மீக ஈடுபாட்டுடன் இருக்கிறார். எந்த பிரதமராவது கடலில் குளித்தார்களா? மோடி கடலில் குளித்தார். சாதுக்களிடம் ஆசீர்வாதம் பெறுகிறார்.
பிரதமர் மோடியைப் போல் செயல்பட யாரும் இல்லை. அயோத்தி இராமர் கோவில் பிரான் பிரதிஷ்டை நிகழ்ச்சிகளை திரைகளில் நேரடி ஒளிபரப்பு செய்ய அரசு தடை விதித்தாலும் மக்கள் எழுச்சியுடன் திரையில் பார்த்து வருகின்றனர்.
எதை செய்யக்கூடாது என்கிறோமோ, அதனை அதிகமாக செய்வார்கள். அடுத்த தேர்தலிலும் மோடிதான் வெற்றி பெறுவார். அந்த ஸ்ரீராமனே மீண்டும் ஆட்சியில் அமர்த்துவார். தமிழகத்தில் காங்கிரஸ் ஒரு தொகுதியிலும் ஜெயிக்காது” என்றார்.