500 ஆண்டுகள் கழித்து ஸ்ரீராமரைப் பற்றி பேச இன்று (நேற்று) நல்ல நாள். ஆகவே, இராவணனைப் பற்றிப் பேச வேண்டாம் என்று ராகுல் காந்தியை அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா ஷர்மா மறைமுகமாகத் தாக்கி இருக்கிறார்.
அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், கேரள மாநிலம் வயநாடு தொகுதியின் எம்.பி.யுமான ராகுல் காந்தி, “இந்திய ஒற்றுமை நியாய யாத்திரை” என்கிற பயணத்தை வடகிழக்கு மாநிலங்களில் தொடங்கி இருக்கிறார். மணிப்பூர் மாநிலத்தில் தொடங்கிய இந்த யாத்திரை, நாகலாந்து மாநிலம் வழியாக தற்போது அஸ்ஸாம் மாநிலத்தை நேற்று வந்தடைந்தது.
இதையடுத்து, ஸ்ரீமந்த சங்கரதேவா பிறந்த இடமான படத்ராவா சத்ராவில் சுவாமி தரிசனம் செய்ய திட்டமிட்டிருந்தார். ஆனால், ராகுலுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. மேலும், அஸ்ஸாமில் ராகுலின் நியாய யாத்திரைக்கும் நேற்று தடை விதிக்கப்பட்டது.
இது தொடர்பாக மாவட்ட நிர்வாகம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “உளவுத்துறை தகவலின்படி, ஒரே நாளில் இராமர் கோவில் கும்பாபிஷேகம், இந்திய ஒற்றுமை நியாய யாத்திரை என்ற இரு நிகழ்வுகள் நடைபெறுகிறது.
இந்த பரபரப்பான சூழலை சில சமூக விரோதிகள் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு, சட்ட விரோதச் செயல்களில் ஈடுபடலாம். இதனால், மாவட்ட அமைதிக்கும் குந்தகம் ஏற்படலாம். ஆகவே, இந்திய ஒற்றுமை நியாய யாத்திரைக்கு தடை விதிக்கப்படுகிறது” என்று தெரிவித்திருந்தது. இதை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில், ராகுல் காந்தி தடுத்து நிறுத்தப்பட்டது குறித்து அஸ்ஸாம் மாநில முதல்வர் ஹிமாந்தா பிஸ்வா ஷர்மாவிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், “ராவணனைப் பற்றி ஏன் பேசுகிறீர்கள்? இன்று (நேற்று) இராமரைப் பற்றி பேசலாமா? 500 ஆண்டுகள் கழித்து இராமரைப் பற்றி பேச இன்று (நேற்று) நல்ல நாள். ஆகவே, ராவணனைப் பற்றி பேச வேண்டாம்” என்று கூறியிருக்கிறார்.