இந்தியாவின் 75வது குடியரசு தின விழா அணிவகுப்பு ஊர்தியில் இஸ்ரோ சார்பில் சந்திரயான்-3 விண்கலம், உத்தரப் பிரதேச அரசு சார்பில் ராமர் சிலை உள்ளிட்ட ஊர்திகள் இடம்பெற உள்ளன.
இந்தியாவின் 75வது குடியரசு தின விழா, வரும் 26 ஆம் தேதி நாடுமுழுவதும் கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு, நாடு முழுவதும் அரசு சார்பில், குடியரசு தின நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
குடியரசு தினத்தன்று, டெல்லி கடமைப்பாதையில் வீரர்கள் அணிவகுப்பு, மாநிலங்கள் மற்றும் மத்திய அமைச்சக துறைகளின் அலங்கார ஊர்திகள் அணிவகுப்பு, மோட்டார் மற்றும் விமான சாகச நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.
இந்நிலையில், இந்த ஆண்டு குடியரசு தினவிழாவை முன்னிட்டு டெல்லி கர்தவியா பாதையில் நடைபெறும் அணிவகுப்பில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு (இஸ்ரோ) ‘சந்திரயான்-3’ – விண்கல மாதிரி ஊர்தி இடம்பெற உள்ளது.
‘சந்திரயான்-3’ சந்திரனின் தென் துருவத்தில் வெற்றிகரமாக தரையிறங்கியது, ‘சிவ சக்தி பாயிண்ட்’ என பெயரிடப்பட்ட இடம் ஆகியவை இஸ்ரோ ஊர்தி இடம்பெற உள்ளது.
சந்திரயான்-3 விண்கலம் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 23 அன்று சந்திரனின் தென் துருவத்தில் வெற்றிகரமாக தரையிறங்கியது. இது நிலவின் தென் துருவத்தில் முதன் முதலாக விண்கலத்தை தரையிறக்கிய நாடு என்ற பெருமையை இந்தியாவுக்கு பெற்றுத்தந்தது.
அதேபோல் குடியரசு அணிவகுப்புக்கான உத்தரப் பிரதேச அலங்கார ஊர்தியில் ராமர் இடம்பெறுகிறார். அயோத்தி ராமர் கோயிலில், பால ராமர் சிலை பிரான பிரதிஷ்டை நேற்று நடைபெற்றது.
இந்நிலையில், அம்மாநில அரசு சார்பிலான அலங்கார ஊர்தியில் பால ராமர் சிறப்புகளை சித்தரிக்கும் காட்சிகள் இடம்பெற உள்ளன.
அடுத்த தலைமுறை பிரமோஸ் ஏவுகணைகளை உற்பத்தி செய்வதற்காக உத்தரப் பிரதேசத்தில் ஒரு ஆலை உருவாக்கப்பட்டு வருவதால், அம்மாநில அரசு ஊர்தியில் பிரமோஸ் ஏவுகணைகளும் இடம்பெற்றுள்ளன.
பல்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த 16 அலங்கார ஊர்திகள், மத்திய அரசின் 9 துறைகளைச் சேர்ந்த அலங்கார ஊர்திகள் உள்பட மொத்தம் 25 அலங்கார ஊர்திகள், குடியரசு தின அணிவகுப்பில் இடம்பெற உள்ளன.