பட்ஜெட் கூட்டத்தொடரை முன்னிட்டு 140 சிஐஎஸ்எஃப் வீரர்கள் நாடாளுமன்ற வளாக பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
கடந்த டிசம்பர் 13-ம் தேதி மக்களவை நடந்துகொண்டிருந்தபோது, பார்வையாளர்கள் மாடத்தில் இருந்த 2 பேர் அவைக்குள் குதித்து புகைக் குண்டுகளை வீசித் தாக்குதலில் ஈடுபட்டனர். அதேபோல, நாடாளுமன்றத்துக்கு வெளியேயும் 2 பேர் புகைக் குண்டுகளை வீசி தாக்குதலில் ஈடுபட்டனர். இதுதொடர்பாக 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இதனையடுத்து நாடாளுமன்ற வளாகத்தில் பாதுகாப்பை மேம்படுத்த மத்திய அரசு தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக பட்ஜெட் கூட்டத்தொடரின் போது மத்திய தொழிற்பாதுகாப்பு படையினர் 140 பேரை பாதுகாப்புக்கு நிறுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. அவர்கள் பார்வையாளர்கள் மற்றும் அவர்களின் உடமைகள் சோதனை உள்ளிட்ட பணிகளில் ஈடுபடுவார்கள்.
பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கும் ஜனவரி 31 முதல் பணிக்கு தயாராக இருக்கும் வகையில், ஏற்கனவே அங்கு இருக்கும் மற்ற பாதுகாப்பு ஏஜென்சிகளுடன் இணைந்து அவர்கள் பணியில் ஈடுபடுவார்கள் என தெரிகிறது.
சுமார் 1.70 லட்சம் பணியாளர்கள் பலம் வாய்ந்த சிஐஎஸ்எஃப் என்பது மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள மத்திய ஆயுதமேந்திய போலீஸ் படையாகும் (சிஏபிஎஃப்), இது விண்வெளி மற்றும் அணுசக்தி தவிர நாட்டின் 68 சிவில் விமான நிலையங்களில் பாதுகாப்பு பணிகளை மேற்கொள்கிறது.