அடர்ந்த பனி மூட்டம், கடுமையான குளிர் ஆகியவற்றால் வட இந்தியா தத்தளித்து வரும் நிலையில், மேலும் 5 நாட்களுக்கு வடக்கு ராஜஸ்தான், இமாச்சலப் பிரதேசம், உத்தரகண்ட், பஞ்சாப், ஹரியானா, சண்டிகர் மற்றும் உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் இதே நிலை தொடரும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.
இதுகுறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “அடுத்த 5 நாட்களுக்கு இந்தியாவில் அடர்த்தியான மூடுபனி நிலவும். டெல்லி, சண்டிகர், பஞ்சாப், ஹரியானா, உத்தரப் பிரதேசம் மற்றும் பீகார் ஆகிய மாநிலங்களில் இரவு மற்றும் காலை நேரங்களில் இந்த நிலை நிலவும்.
அடுத்த 2 முதல் 3 நாட்களில் மத்தியப் பிரதேசம், இமாச்சலப் பிரதேசம், உத்தரகண்ட், மேற்கு வங்கம், அஸ்ஸாம், மேகாலயா, மிசோராம் மற்றும் திரிபுரா ஆகிய மாநிலங்களில் அடர்ந்த மூடுபனி இருக்கும். தவிர, பஞ்சாப், ஹரியானா, உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், உத்தரகண்ட் மற்றும் பீகார் ஆகிய மாநிலங்களில் அடுத்த 2 நாட்களுக்கு கடுமையான குளிர் நிலவும்.
அதேபோல, இமாச்சலப் பிரதேசம், உத்தரகண்ட் மற்றும் மேற்கு உத்தரப் பிரதேசத்தில் நிலத்தடி உறைபனி நிலைகள் கணிக்கப்பட்டுள்ளன. தவிர, அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் 28-ம் தேதிவரை பல இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நாளை கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. மேற்கு உத்தரப் பிரதேசத்தின் மீரட்டில் நேற்று குறைந்தபட்ச வெப்பநிலை 1.5 டிகிரி செல்சியஸாக பதிவாகி இருக்கிறது” என்று தெரிவித்திருக்கிறது.
வட இந்தியாவில் மூடுபனி மற்றும் கடும்குளிர் தொடர்ந்து நிலவி வருவதால், தேசிய தலைநகர் டெல்லியில் இரயில் மற்றும் விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. இந்திய இரயில்வேயின் கூற்றுப்படி, இன்று காலை அடர்ந்த பனிமூட்டம் காரணமாக நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து டெல்லி செல்லும் 24 இரயில்கள் தாமதமாக இயக்கப்படுகின்றன.
குறிப்பாக, அசம்கர் – டெல்லி ஜே.என். கைஃபியத் எக்ஸ்பிரஸ், ரேவா – ஆனந்த் விஹார் எக்ஸ்பிரஸ் மற்றும் புவனேஸ்வர் – புதுடெல்லி ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ஆகியவை அட்டவணையை விட 6 மணி நேரத்திற்கும் மேலாக தாமதமாக இயங்கும். அதேபோல, பனிமூட்டம் காரணமாக டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்திலிருந்து விமானச் செயல்பாடுகள் தாமதமாவதோடு, சில விமானங்கள் ரத்து செய்யப்பட்டிருக்கின்றன.