புதுதில்லியில் மத்திய திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் துறை அமைச்சகத்தின் புதிய கட்டடமான கௌஷல் பவனைக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இன்று (2024 ஜனவரி 24) திறந்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில், பிரதமரின் விஸ்வகர்மாத் திட்டம், பிரதமரின் பழங்குடியினர் நீதிக்கான இயக்கம், வாழ்வாதார மேம்பாட்டுக்கான திறன் மேம்பாடு மற்றும் அறிவு விழிப்புணர்வு, பிரதமரின் திறன் மேம்பாட்டுத் திட்டம் போன்ற அரசின் பல்வேறு திட்டங்களின் பயனாளிகள் அமைத்துள்ள கண்காட்சி அரங்குகளைக் குடியரசுத் தலைவர் பார்வையிட்டு அவர்களுடன் கலந்துரையாடினார்.
2019-ம் ஆண்டு மார்ச் மாதத்தில் அடிக்கல் நாட்டப்பட்ட கௌஷல் பவன் கட்டடத்தில் திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் அமைச்சகம் மற்றும் அதனுடன் தொடர்புடைய அமைப்புகளான பயிற்சி இயக்குநரகம், தொழிற்கல்வி மற்றும் பயிற்சிக்கான தேசிய கெளன்சில் மற்றும் தேசிய திறன் மேம்பாட்டுக் கழகம் ஆகியவற்றுக்கான அலுவலகங்கள் உள்ளன.
நவீன வசதிகள் மற்றும் உள்கட்டமைப்புடன் கூடிய இந்த அதிநவீன அலுவலகக் கட்டிடம், புதிய பணிக் கலாச்சாரத்தை அறிமுகப்படுத்துவதற்கும், திறன் இந்தியா இயக்கத்திற்கு உத்வேகம் அளிப்பதற்கும், பாதுகாப்பான, வசதியான மற்றும் திறமையான பணிச்சூழலை வழங்கும் நோக்கத்துடனும் கட்டப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.