இந்தியாவின் புகழ்பெற்ற எதிர்காலத்திற்கு ஸ்ரீராமரின் இலட்சியங்களே அடிப்படை. இந்த இலட்சியங்களின் பலம் 2047-ல் வளர்ந்த இந்தியாவை உருவாக்க வழி வகுக்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்திருக்கிறார்.
உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தி இராம ஜென்ம பூமியில், மிகவும் பிரம்மாண்டமாக ஸ்ரீராமர் கோவில் கட்டப்பட்டு வருகிறது. இக்கோவிலின் தரைத்தளப் பணிகள் நிறைவடைந்த நிலையில், கடந்த 22-ம் தேதி கோவில் திறப்பு விழா மற்றும் இராம் லல்லா சிலை பிரான் பிரதிஷ்டை விழா ஆகியவை நடைபெற்றது.
பாரதப் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு, இராம் லல்லா சிலையை பிரதிஷ்டை செய்தார். இதையொட்டி, பிரதமர் மோடிக்கு வாழ்த்துத் தெரிவித்து குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஒரு கடிதம் எழுதி இருந்தார். இக்கடிதத்துக்கு பிரதமர் மோடி பதிலளித்து கடிதம் எழுதி இருக்கிறார்.
அக்கடிதத்தில் பிரதமர் மோடி, “பிரம்மாண்ட இராமர் கோவில் வெற்றி, வளர்ச்சியின் புதிய மாதிரிகளை உருவாக்க தொடர்ந்து நம்மை ஊக்குவிக்கும். இந்தியாவின் புகழ்பெற்ற எதிர்காலத்திற்கு ஸ்ரீராமரின் இலட்சியங்களே அடிப்படை. இந்த இலட்சியங்களின் பலம் 2047-ல் வளர்ந்த இந்தியாவை உருவாக்க வழி வகுக்கும்” என்று தெரிவித்திருக்கிறார்.
மேலும், பிரதான் மந்திரி ஜன்ஜாதி ஆதிவாசி நியாய மகா அபியான் பற்றி குறிப்பிட்ட பிரதமர், “PM JANMAN போன்ற பல்வேறு பிரச்சாரங்கள் நாட்டு மக்களின் வாழ்வில் பெரிய மாற்றத்தை கொண்டு வருகிறது. இராமரின் ஒப்பந்தங்கள் ஏழைகளின் நலனுக்காகவும், அதிகாரமளிக்கவும் உழைக்க நமக்கு நிலையான ஆற்றலைத் தருகின்றன.
இராமர் சப்கா சாத், சப்கா சாத், சப்கா விஸ்வாஸ் மற்றும் சப்கா பிராயஸ் (அனைவரின் ஆதரவு, அனைவரின் நம்பிக்கை, அனைவரின் முயற்சி) ஆகியவற்றின் உத்வேகத்தை அளித்திருக்கிறார். இந்த மந்திரத்தின் பலன்கள் இன்று எங்கும் காணப்படுகிறது. கடந்த ஒரு தசாப்தத்தில் நாடு சுமார் 25 கோடி மக்களை வறுமையில் இருந்து மீட்டெடுப்பதில் வெற்றி பெற்றிருக்கிறது. எனது வாழ்க்கையில் மறக்க முடியாத தருணங்களை அயோத்தி தாமில் கண்டேன்” என்று கூறியிருக்கிறார்.