மத்திய, மாநில அரசுகளுடனான முத்தரப்பு ஒப்பந்தத்தில் கடந்த மாதம் கையெழுத்திட்டதைத் தொடர்ந்து, 44 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட ‘உல்ஃபா’ தீவிரவாத அமைப்பு அதிகாரப்பூா்வமாக கலைக்கப்பட்டு விட்டதாக அந்த அமைப்பின் பொதுச் செயலாளர் அனுப் சேட்டியா தெரிவித்திருக்கிறார்.
வட கிழக்கு மாநிலங்களில் அமைதியை ஏற்படுத்தும் நோக்கில், மத்திய அரசு ஆயுதக்குழுக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக, அஸ்ஸாம் மாநிலத்திலும் பல்வேறு ஆயுதக்குழுக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதன் பயனாக பல ஆயுதக்குழுக்கள் ஆயுதங்களை ஒப்படைத்து விட்டு, அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருக்கின்றன.
அந்த வகையில், அஸ்ஸாம் மாநிலத்தில் கடந்த 44 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட உல்ஃபா தீவிரவாத அமைப்புடனும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதன் பயனாக, டிசம்பா் 29-ம் தேதி உல்ஃபா அமைப்பு முத்தரப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. அப்போது, ஒரு மாத காலத்துக்குள் அமைப்பை கலைக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், உல்ஃப் அமைப்பு கலைக்கப்பட்டு விட்டதாக அவ்வமைப்பின் பொதுச் செயலாளர் அனுப் சேட்டியா தெரிவித்திருக்கிறார். இதுகுறித்து அனுப் சேட்டியா கூறுகையில், “அஸ்ஸாம் மாநிலம் தர்ராங் மாவட்டத்தில் நடைபெற்ற கூட்டத்தில், அமைப்பை கலைத்து விடவும், முத்தரப்பு ஒப்பந்தத்தில் உள்ள பிற விதிகளைச் செயல்படுத்துவது தொடா்பாக 7 பேர் அடங்கிய கண்காணிப்புக் குழுவை அமைக்கவும் முடிவு எடுக்கப்பட்டது.
அக்குழுவின் ஒருங்கிணைப்பாளராக நான் செயல்பட உள்ளேன். சமூக மற்றும் மொழி ரீதியிலான அடையாளத்தைப் பாதுகாக்க “அசோம் ஜாட்டியா பிகாஷ் மஞ்சா” என்ற புதிய சமூக கலாசார அமைப்பு தொடங்கப்படுகிறது. உல்ஃபா அமைப்பு கலைக்கப்பட்டது, முத்தரப்பு ஒப்பந்தம் செயல்படுத்துவது குறித்து மாநில முதல்வர் ஹிமந்தா பிஸ்வா ஷர்மாவை சந்தித்து குழு உறுப்பினர்கள் தெரிவிப்பார்கள்” என்றார்.