பரீக்ஷா பே சர்ச்சா 2024-ஐ முன்னிட்டு நடைபெற்ற தேசிய அளவிலான ஓவியப் போட்டியில் 60,000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர்.
மத்திய கல்வி அமைச்சகம் சார்பில், பரீக்ஷா பே சர்ச்சா (தேர்வு பற்றிய மொழியாக்க விவாதம்) நிகழ்ச்சி, கடந்த 2018-ம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது. மாணவர்களுக்கு நுழைவுத் தேர்வுகள் தொடர்பான பயம் மற்றும் மன அழுத்தத்தில் இருந்து விடுபடும் வகையில், இந்நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.
இந்த நிகழ்ச்சியில் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்கள் பங்கேற்கலாம். நிகழ்ச்சியில் பங்கேற்பவர்கள் ஏதேனும் ஒரு போட்டியின் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இவ்வாறு தேர்வு செய்யப்படுபவர்கள் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் வாய்ப்புக் கிடைக்கும்.
இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்பவர்களுடன் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி காணொலி வாயிலாக உரையாடுவார். போட்டியில் வெற்றிபெறும் பங்கேற்பாளர்களுக்கு பிரதமருடன் நேரடியாக உரையாடும் வாய்ப்பு வழங்கப்படும். எனவே, இந்நிகழ்ச்சியில் பங்கேற்க மாணவர்கள் மத்தியில் ஆர்வம் நிலவி வருகிறது.
அந்த வகையில், இந்த ஆண்டுக்கான பரீக்ஷா பே சர்ச்சா நிகழ்ச்சி ஜனவரி 29-ம் தேதி நடைபெறுகிறது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்க 2.26 கோடி பேர் பதிவு செய்திருந்தனர். இவர்களுக்கான போட்டிகள் நடைபெற்று வருகிறது. அதன்படி, நேற்று நடைபெற்ற தேசிய அளவிலான ஓவியப் போட்டியில் 60,000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.
மொத்தம், 657 கேந்திரிய வித்யாலயா மற்றும் 122 நவோதயா வித்யாலயா மற்றும் நாடு முழுவதும் உள்ள 774 மாவட்டங்களிலுள்ள பள்ளிகளில் ஓவியப் போட்டி நடத்தப்பட்டது. இது தவிர, ஜனவரி 12-ம் தேதி முதல் 23-ம் தேதி வரை மராத்தான், இசைப் போட்டி, நினைவுப் போட்டி, நுக்கத் நாடகம், போஸ்டர் தயாரித்தல் மற்றும் யோகா, தியான அமர்வுகள் உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றன. இதில் வெற்றிபெறுபவர்கள் பிரதமர் மோடியுடன் நேரடியாக உரையாடுவார்கள்.