75-வது குடியரசு தின அணிவகுப்பு நிகழ்ச்சியைப் பார்ப்பதற்கு வசதியாக, 77 ஆயிரம் பேர் அமரக்கூடிய வகையில் இருக்கை வசதி அமைக்கப்பட்டுள்ளது. அதில், 42 ஆயிரம் இருக்கைகள் பொதுமக்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
ஜனவரி 26-ஆம் தேதி நாடு முழுவதும் குடியரசு தின விழா கொண்டாடப்பட உள்ளது. அன்றைய தினம் டெல்லியில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தேசியக் கொடி ஏற்றி வைத்து, முப்படைகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்க உள்ளார்.
அப்போது, டெல்லி கடமைப்பாதையில் இந்திய இராணுவம், கடற்படை, விமானப்படை, காவல்துறை, துணை இராணுவப்படை ஆகிய படைப்பிரிவு வீரர்களின் கம்பீரமான அணிவகுப்பு, மாநிலங்கள் மற்றும் மத்திய அமைச்சக துறைகளின் அலங்கார ஊர்திகள் அணிவகுப்பு நிகழ்ச்சிகள் நடைபெறும்.
மேலும், பார்வையாளர்களைக் கவரும் வகையில், விமானப்படையின் சார்பில், போர் விமானங்கள் மூலம் ஆகாயத்தில் சாகச நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.
இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக, பாரத பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பின் பேரில், பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் கலந்து கொள்கிறார். தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வு நெருங்கி வருவதால், தலைநகர் டெல்லியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
குடியரசு தின அணிவகுப்பு ஜனவரி 26-ஆம் தேதி காலை 10.30 மணிக்கு நடைபெற உள்ளது. குடியரசு தின நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு அருகில், 77 ஆயிரம் பேர் அமரக்கூடிய வகையில் இருக்கை வசதி அமைக்கப்பட்டுள்ளது. அதில், 42 ஆயிரம் இருக்கைகள் பொதுமக்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
குடியரசு தின அணிவகுப்பு டிக்கெட்டுகள் முறையே, ரூ.500, ரூ.100, ரூ.20 ஆகிய விலைகளில் விற்கப்படுகிறது. இதனை பாதுகாப்பு அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் சென்று பதிவு செய்து பெற்றுக் கொள்ளலாம்.